உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவந் நேத்ர தியானம்!

பகவந் நேத்ர தியானம்!

பக்தர்களே, உங்கள் மீது பொறாமையாலும், உங்கள் வளர்ச்சியைச் சகிக்க முடியாததாலும் பல திருஷ்டி பார்வைகள் பட்டிருக்கலாம். அந்த கண் திருஷ்டி மறைமுகமாக உங்களது மனதைப் பாதிக்கலாம். உங்கள் நிம்மதியைக் கெடுக்கலாம். தீய பார்வை உங்கள் மீது படாதிருக்க, நல்லோரைக் காண்பதுவும் நன்றே என்ற மூத்தோர் வாக்குப்படி வாழ்வது மிக அவசியம். அன்னை சாரதாதேவி, ராமகிருஷ்ணரைப் பூஜிக்கும் இடத்தில் அவரது பார்வை இருக்கும் என்கிறார். அதன்படி பகவான் ராமகிருஷ்ணரின் அருட்கடாட்சத்தைப் பெறுவதற்கு குருதேவரின் அருட்பார்வை கொண்ட ஒரு திருவுருவப்படத்தை அலங்கரித்து, அவர் முன் அமருங்கள். ராமகிருஷ்ணரின் திருமுன்பு நீங்கள் அமர்ந்திருப்பதால் பக்தர்களே, உங்களது உடலும் மனதும் ஓடாமல் அமரட்டும்.

ஒருமுறை ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்ளுங்கள். அதனால் வரும் சூட்டினை உங்கள் கண்கள் மீது வைத்துக் கொள்ளுங்கள். கண்களின் வழியேதான் நம் சக்தி அதிகம் விரயமாகிறது. ஆகவே கண்களின் சோர்வு நீங்குவதற்காக ஐந்து முறை உங்கள் கண்களை மூடி மூடித் திறந்து பாருங்கள். கண்களை இடது புறத்திலிருந்து வலது புறமாகவும் வலது புறத்திலிருந்து இடது புறமாகவும் திருப்பிப் பாருங்கள். கண்களை மேலும் கீழுமாகத் திருப்புங்கள். இதன்மூலம் உங்கள் கண்கள் எல்லாவற்றையும் பார்க்கும் வல்லமை பெறும். கண்ணைப் பார் சிரி என்று இல்லங்களில் சாதாரண மக்களின் திருஷ்டி படாமலிருக்க எழுதி வைத்திருப்பார்கள். நீங்கள் அகமுகமாகி, சிரிக்க வேண்டுமானால் கண்ணைப் பார்க்கத் தான் வேண்டும்.

யாருடைய கண்களைக் காண்பது? ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா.... என்று கூறி, பகவானை உங்கள் நெஞ்சுக்குள் வரவழைக்க, அவருக்கு வரவேற்பு நல்குங்கள். உங்கள் பார்வையைத் திரட்டி, ராமகிருஷ்ணரின் திருவுருவைப் பாருங்கள். உலகிற்கே ஒளியான பகவானே நம் அகத்திலும் அறியாமை இருளை அகற்றுவதற்காக நம்மை நோக்குகிறார் என்று நம்பி அவரது திருக்கண்களை நோக்குங்கள். வேண்டினால் ஓடோடி வரும் ராமகிருஷ்ணர் தமது பிரேமைக் கண்களால் உங்களைப் பார்த்துப் புன்னகைப்பதைப் பாருங்கள். பிறகு கீழ்க்கண்டவற்றைச் சொல்லிப்பாருங்கள். பகவானே, தங்கள் வியாகுலக் கண்கள் பவதாரிணி தேவியைத் தரிசித்தவை: தங்களது பக்திமிகு நயனங்கள் சீதாதேவியைக் கண்டவை: தங்களது ஞானக்கண்கள் ரிஷி முனிவர்களைத் தரிசித்தவை; தங்களது சாந்தமான கண்கள் சாரதம்மாவை, ஷோசியாகப் பூஜித்தவை; உலகில் சாதகர்களையும் பக்தர்களையும் தேடித் தேடிக் கண்டது உங்கள் நேத்திரங்கள். எல்லாப் பெண்களிடமும் தேவியையே கண்டது தங்கள் நயனங்கள். அதே சமயம் எந்த தேவ, தேவியைத் தரிசித்த போதிலும், மக்கள் நலனுக்காக வேண்டிக் கண்ணீர் சொரிந்ததும் தங்களது நயமிகு நேத்திரங்கள்தானே!

கதாதரக் கடவுளே, ஞான வடிவான விரிந்த நெற்றிக்கும் அன்பு ஒழுகும் திருவதனத்திற்கும் நடுவே இருப்பவை தங்களது திருக்கண்கள். ஞான மிச்ரித பக்தி - ஞானமும் பக்தியும் கலந்த அற்புதக் கலவை அல்லவா அக்கண்கள்! சூரியனையும் சந்திரனையும் நேத்திரங்களாகக் கொண்ட பகவான் தாங்கள். அருள் ஞானம் பெற்றோருக்கு அநந்தம் விழி என்று உரைத்ததுபோல் பகவானே தாங்கள் அனைத்தையும் காண்பவர். பிரபோ, தேவியாக இருக்கும்போது தாங்கள் விசாலாக்ஷியாக மாறுகிறீர்கள். விசாலாக்ஷி அதாவது அனைத்தையும் பார்க்கும் விசாலாமான பார்வை மட்டுமல்ல, எதையும் ஆழமாகவும் பெருந்தன்மையுடனும் பார்க்கிறீர்கள். ஒரு துளி நீரில் கடலையே காணும் தன்மை உங்களுடையது. எதைக் கண்டால் எல்லாம் கண்டதற்குச் சமமோ அதைக் காணும் அம்சம் அது. என் பிரபுவே! நரேன், ராக்காலைப் போன்ற நித்திய சித்தர்களைக் கண்டு கண்ணின் காதோரத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தீர்களே! எங்கோ கிடந்த என் போன்றோர் மீதும் இன்று கடைக்கண் காட்டுகிறீர்களே! ஆழமான பக்தியற்ற என்னைப் பார்த்தும் உங்கள் கண் கசிகிறதே! ஆனால் அது கண்ணின் மூக்கோரத்தில் வழியும் துன்பக் கண்ணீர் அன்றோ! பாவிகளைப் பார்க்காத பாவங்களை மட்டுமே பார்க்கும் திருநயனங்களைக் கொண்டவரே, என்னிடமும் உங்கள் பிரேமையைப்  பெருக்குங்கள்.

தேவிக்காகக் கண்ணீர் சிந்திய கண்கள், பிறகு பக்தர்களின் வளர்ச்சிக்காக விழிநீர் வடித்தது. உலக அருளாளர் வரலாற்றில் ஓர் அற்புதக் கண்ணீர்க் காவியம்.  பகவானே, தாங்கள் பக்தர்களுக்காகக் கூவிக் கூவி பவதாரிணி தேவியின் முன்பு அமுத அந்தச் சம்பவம் அகிலத்தில் எந்த தேவபுருஷரும் இதுவரை செய்திடாதது!

பெருமானே, உங்களது கண்களில் பக்தர்கள் மீதான கருணை எனும் அஞ்சனம் பூசியுள்ளீர்கள். அதனாலன்றோ, என் குற்றங்குறைகளைத் தாங்கள் காண்பதில்லை.

ஜன்ம ஜன்மமாக என் அகத்தில் சேர்த்து வைத்துள்ள அஞ்ஞானம் உங்கள் ஒரு பார்வையால் அகலுமல்லவா!

தங்கள் கருணையைப் பெறுவதற்கும், பெற்றதைப் போற்றுவதற்கும் நான் என் கண்களில் விசுவாசம் என்ற அஞ்சனத்தைப் பூசிக் கொள்ள அருள்வீர்களாக!

சிவ-சக்தி சங்கமத்தைச் சிறுவிலங்குகளின் சல்லாபத்திலும் பார்த்த புனிதரே! மோகத்துடன் நான் பார்க்கும் பொருட்களை எல்லாம், தாங்கள் துப்பிய எச்சில் போன்று காண்பீர்கள்!

அடடா, உங்கள் திருவாயிலிருந்து வந்த எச்சிலை உண்ட எறும்புகள்கூட பக்தியும் முக்தியும் பெறும் என்று நம்பினாரே உங்கள் பக்தர் கிரீஷ்பாபு!

பக்தர்களே, பகவான் ராமகிருஷ்ணர் ஒரு மாபெரும் சிற்பி. களிமண்ணிலிருந்தும் அவர் கடவுளர்களைப் படைக்கக்கூடிய மகிமை பொருந்தியவர்.

இப்போது ஒரு கணம், பெரிய கருங்கல்லாக உங்களை நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள்.

உங்களுக்குள் இருக்கும் வேண்டாததை எல்லாம் வெட்டிச் செதுக்கிவிட்டதால், வெளிப்படுமே உங்களுக்குள் விளங்கும் தெய்வத் திருவுருவம்!

அந்த அற்புதத்தை நிகழ்ந்த வேண்டி, கதாதரப் பெருமான் முன்பு நீங்கள் கல்லாகக் காத்துக் கிடப்பதாகக் கற்பனை செய்யுங்கள்.

நாம் மெல்ல மெல்ல கடவுளின் திருநாமத்தை ஜபிப்பதுபோல, கடவுளும் மெல்ல மெல்ல நம்மைச் செதுக்குகிறார்.

பக்தர்களே, மன ஏக்கத்துடன் நீங்கள் புரியும் ஜப ஒலிதான், கடவுளான சிற்பி உங்களை செதுக்கும் உளியின் ஒலி.

ராமகிருஷ்ணரின் நித்திய பூஜையில் திவ்ய விக்ன நிவாரணம் செய்வதுபோல் தலையிலிருந்து பாதம் வரை கைகளை மெல்ல கொண்டு சென்று ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய என்ற மந்திரத்தை ஐந்து முறை உங்கள் பக்தி மலர்ந்திட உற்சாகமாக ஓதுங்கள்.

இப்போது ராமகிருஷ்ண சக்தி, ராமகிருஷ்ண சிரத்தை, ராமகிருஷ்ண சிந்தனை ஆகியவை உங்களுக்குள் புகுந்துள்ளதாக பாவியுங்கள்.

கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண்ணுளானே! என்ற அப்பர் வாக்கிற்கிணங்க, உங்கள் கண்களில் பாவங்கள் அனைத்தும் அகன்று பரமன் புகுந்தான் என நம்புங்கள்.

பக்தர்களே, இதனால் உங்களுக்குள் இருந்த வீணான எண்ணங்கள், கவலைகள். அல்லல்கள் யாவும் உதிர்ந்துவிடும். உங்களிடம் சேர்ந்துவிட்ட சோம்பல், சோர்வு, தளர்வு, வலி, நோய், பலவீனம் போன்றவற்றையும் உதிர்ந்துவிடும்.

இப்போது கண்களை மெல்ல மூடுங்கள்.

உங்களைப் பற்றி இதுவரை பிறர் சொன்ன விமர்சனங்களை எல்லாம் வீசிவிடுங்கள்.

நீங்களே உங்களைப் பற்றிக் கர்வத்துடன் மிகையாகவோ, தாழ்வு மனப்பான்மையுடன் குறைவாகவோ எண்ணி வந்ததையும் தூர எறிந்து விடுங்கள். இதன்மூலம் உங்களுக்குள் இருந்த மனபாரம் இறங்கி ஓடிவிட்டது.

இப்போது நீங்கள் ராமகிருஷ்ணர் என்ற சிற்பியின் முன்பு செதுக்கப்பட்டு வரும் ஒரு கற்சிலை.

அற்பமாகப் போகவிருந்த நம் வாழ்க்கையை அற்புதமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் மகாதேவர் ராமகிருஷ்ணர். சிற்பியான அவரது திருக்கரத்தின் புனிதத் தீண்டலுக்காகப் பக்தியுடன் காத்திருங்கள்.

சிலையாக நாம்; தேவச் சிற்பியாக ராமகிருஷ்ணர்!

ஆஹா பக்தர்களே! இந்தப் பூரிப்பிலேயே சில கணங்கள் தியானியுங்கள்.

ராமகிருஷ்ணரது ஆன்மிக வாழ்வு எனும் நிறை கடலிலிருந்து ஒரு துளியைப் பெற்றிருந்தால்கூட, அதனால் அந்தக் கணமே மக்கள் தேவர்கள் ஆகிவிடுவார்கள் என்றார் சுவாமி விவேகானந்தர்.

நிவேதனம் செய்யப்பட்ட பொருள்மீது குருதேவரது பார்வை பட்டு, அந்தப் பொருள் அவரால் கிரகிக்கப்படும் என அன்னை சாரதாதேவி கூறுவார்.

பக்தர்களே! நீங்களும் பகவானுக்குப் படைக்கப்பட்டவர்கள் அல்லவா! அதை மனதில் கொண்டு, அந்த நிலையிலேயே கதாதரப் பெருமானிடம் இவ்வாறு வேண்டுங்கள்.

உலகிற்கே கண்ணான கருணைக் கடலே ராமகிருஷ்ணா, இன்று தங்களது கரம்பட்டுப் புனிதம் அடைந்துவிட்டேன். கல்லும் மண்ணுமாக இருந்த என்னை நடமாடும் ஒரு தெய்வீகச் சிலையாக நீங்கள் மாற்றிவிட்டீர்கள். இனி நான் இந்த உலகில் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், தாங்கள் இன்றும் உலகில் புரிந்து வரும் லீலைகளைக் காணவும், தேவசிற்பியே, அடியேனின் கண்களைத் திறந்து வையுங்கள்.

தாங்களே என் கண்ணைத் திறந்துள்ளீர்கள் என்று நம்பி, இப்போது என் கண்களைத் திறக்கிறேன்.

பக்தர்களே, இவ்வாறு பிரார்த்தனை செய்தபடி கண்களைத் திறந்து குருதேவரின் நயனங்களை விநயத்துடன் பாருங்கள்.

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே என்று உவகை கொள்ளுங்கள்.

இனி, நீங்கள் கதாதரப் பெருமானின் கண்காணிப்பில் இருக்கிறீர்கள். அவரது கருணை கடாட்சத்தில் விளங்குகிறீர்கள். இனி எல்லாமே உங்களுக்கு மங்கலமாகவும் நிறைவாகவும் நடக்கட்டும்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !