ஒளி வீச தயாராகும் விளக்குகள்
 பொள்ளாச்சி: நெகமம், கிணத்துக்கடவு பகுதியில் கார்த்திகை தீபம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கார்த்திகை தீப திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நாளில், கோதவாடி குளத்தில் இருந்து எடுக்கப்படும் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட கார்த்திகை தீபங்களில்(விளக்குகளில்), எண்ணெய் ஊற்றி ஒளியேற்றுவர். வீடுகளில், வாசற்படி முதல் மாடிகளின் கைப்பிடிசுவர் வரை விளக்கேற்றி அலங்கரிப்பது வழக்கம். இதேபோல, அதே நாளில் அனைத்து கோவில்களுக்கும் சென்று தெய்வங்களுக்கு விளக்கேற்றி வழிபடுவர். தற்போது, கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணியை, மண்பாண்ட தொழிலாளர்கள் துவங்கியுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் பல கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆவலப்பம்பட்டி, காளியாபுரம், கொல்லபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், ராமச்சந்திராபுரம், பெரும்பதி ஆகிய கிராமங்களில் கார்த்திகை தீபம் தயாரிக்கப்படுகிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கப்பினிபாளையம், ஜக்கார்பாளையம், சிங்காரம்பாளையம், தேவணாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், செட்டியக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தயாரிக்கப்படுகின்றன. இக்கிராமங்களில் தயாரிப்புகள் பொள்ளாச்சி, திருப்பூர்,  உடுமலை, சூலுார்  கோவை, காங்கயம், கேரளா மற்றும் பழநி வரை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுபற்றி மண்பாண்ட தொழிலாளிகளிடம் விசாரித்தபோது,‘கார்த்திகை மாதத்தில் தான் தீபங்கள் தயாரிப்பு பணி நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் பானை தயாரிப்பு மற்றும் பல்வேறு உருவகங்கள், பூவோடு, முளைப்பாரி எடுக்கப்பயன்படும் மண் சட்டிகளும் பணியும் நடக்கும்.  ஆனாலும், ஆண்டு முழுவதும் கள்பானைகள் தயாரித்து, கேரளாவுக்கு அனுப்பும் பணியை ஒரு சிலர் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். எங்கள் பணிக்காக மண் கிடைப்பதில் உள்ள சிரமம், தயாரிப்புகளை விற்பதில் ஏற்படும் முரண்பாடுகள், விலை நிர்ணயம் ஆகியவற்றால் சில சமயங்களில் தொழில் முடக்கம் கண்டு வருகிறது. இதை தவிர்க்கவும். மண்பாண்ட தொழிலை மீண்டும் செழிப்படையச் செய்வதற்கும், தனி நலவாரியம் அமைக்க வேண்டும்,’ என, தெரிவித்தனர்.