திருவண்ணாமலையில் தேரோட்டம் நடத்த வசதியாக மாட வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED :3338 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை, இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். டிச., 9ல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, மஹா ரத தேரோட்டம் நடக்கிறது. இதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அப்போது பக்தர்கள், 150 மீட்டர் நீளமுள்ள இரும்பு சங்கிலி வடத்தை பிடித்து இழுத்து சென்று, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். எவ்வித இடையூறுமின்றி, தேரோட்டம் நடக்க வசதியாக, மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, வருவாய்த்துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், டிச.,12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.