உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை; நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தை அமாவாசை; நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தேவிபட்டினம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடலில் புனித நீராடி, பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். நவக்கிரகங்களை சுற்றி வந்த பக்தர்கள், நவக்கிரக வழிபாடு செய்தனர்.


அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்த நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, கோயில் நிர்வாகம் சார்பில் உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் தனித்தனி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைய துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து, எழுத்தர் தங்கவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் திருமாறன் ஆகியோர் செய்தனர். திருப்புல்லாணி: தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரையில் புனித நீராடுவதற்காக அதிகாலையை பக்தர்கள் குவிந்தனர். புரோகிதர்களிடம் பித்ருக்கடன் பூஜை உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்துவிட்டு கடலில் நீராடி பின்னர் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனர். சேதுக்கரை அருகே உள்ள சின்னக்கோவில் பகுதியில் உள்ள வெள்ளைப் பிள்ளையார் மற்றும் அகத்தியருக்கு சிதறு தேங்காய் உடைத்தனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு வெள்ளம், பச்சரிசி, அகத்திக்கீரை, காகங்களுக்கு அன்னமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.  


திருவாடானை: தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். ராம பிரான் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் வழிபட்ட தலங்களில் ஒன்றாகக் தீர்த்தாண்டதானம் கருதப்படுகிறது. ராமபிரான் தன் தந்தை தசரதருக்குத் திதி கொடுக்க நினைத்தபோது, அனைத்துப் புண்ணிய நதிகளும் இங்கே தீர்த்தமாக உருவெடுத்ததாக ஐதீகம். இதனாலேயே இந்த ஊர் தீர்த்தாண்டதானம் (தீர்த்தங்கள் ஆடிய தானம்) என்று அழைக்கப்படுகிறது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கடற் கரையில் அமைந்துள்ள சர்வ தீர்த்தேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி ஊர்வலம், அன்னதானம் நடந்தது. கடலாடி: சமத்துவபுரம் அருகே பழமை வாய்ந்த வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர்கள் வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. பரிவார தெய்வங் களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பொங்கலிட்டு, நேர்த்தி கடனாக சேவல்கள் கோயிலில் விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !