உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேகம்
சேலம்: கரபுரநாதர் கோவிலில், உலக நன்மைக்காக, 1,008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், கார்த்திகை மாத, மூன்றாவது திங்களில், ஆண்டு தோறும், 108 சங்காபிஷேகம் நடக்கும். நடப்பாண்டில், 1,008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. காலையில், கரடிசித்தர் சன்னதி முன், 1,008 இடம்புரி சங்குகளை சுத்தம் செய்து, அதில் புனிதநீரை நிரப்பி, தட்டுகளில் அடுக்கி வைத்து, மலர்களால் அலங்கரித்தனர். மேலும், தனித்தனியாக சிவலிங்க வடிவிலும், ஸ்ரீசக்ர வடிவிலும், சங்குகள் அலங்கரித்து வைத்திருந்தனர். உலக நன்மைக்காக நடந்த சங்காபிஷேகத்தில், ருத்ர ஜபம், யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 1,008 சங்குகளில் உள்ள புனிதநீரை, மூலவர் கரபுரநாதருக்கும், 108 சங்குகளில் உள்ள புனிதநீரை, பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேகம் செய்தனர். பின், மூலவர் பெருவுடையாருக்கு தங்க கவசம், பெரியநாயகிக்கு, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. கோவில் அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள், விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.