உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் யானை மண்டபம் தயார்

திருத்தணி கோவிலில் யானை மண்டபம் தயார்

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், யானை தங்குவதற்கு, 27 லட்சம் ரூபாய் செலவில் யானை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருத்தணி முருகனுக்கு, இந்திரன் தனது ஐராவதம் யானையை, திருமண சீதனமாக வழங்கியதாக ஐதீகம். ரூ.16 லட்சம் செலவுஇதனால், முருகனை தரிசித்த பின், பக்தர்கள் யானையிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தனர். யானை வள்ளி கோவிலுக்கு, யானை வள்ளியை, 1982ல், திரைப்பட தயாரிப்பாளர், சின்னப்ப தேவர் வழங்கினார். இந்த யானை வள்ளி, மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களை, ஆசீர்வாதித்து வந்தது. உற்சவர் வீதியுலா, தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருவிழா சமயங்களில், திருத்தணி நகர வீதிகளில் உற்சவர் முருகப் பெருமானுடன், யானை வள்ளி, வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் இந்த யானை, 2010ல், உடல் நலக்குறைவால் இறந்தது. அதன் பின் இதுவரை முருகன் கோவிலில் யானை இல்லை.

இந்நிலையில், 10 மாதங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், அசாம் மாநிலத்திற்கு சென்று, 16 லட்சம் ரூபாய் செலவில், புதிய பெண் யானையை வாங்கினார். அந்த யானையை, திருத்தணி முருகன் கோவிலுக்கு தானமாக வழங்குவதாகவும் உறுதியளித்து உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

புதிய கட்டடம்: மலைக்கோவிலில் யானை மண்டபம் இல்லாததால், புதிய மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிதியில் இருந்து, 27 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது யானை மண்டபம் மலைக்கோவில் வளாகம் படாசெட்டி குளம் அருகில் புதியதாக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதன் திறப்பு விழாவும் கடந்தாண்டு நடைபெற்றது. ஆனால், யானை நேற்று வரை மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !