சபரிமலையில் ஆன்லைன் வரிசை மூலம் 4.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை: ஆன்லைன் வரிசை மூலம் 21 நாட்களில் 4.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரள போலீஸ் சார்பில் ஆன்லைன் வரிசை ஏற்படுத்தப்பட்டது. அப்போது எ.டி.ஜி.பி.,-யாக இருந்த சந்திரசேகரன்நாயர், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டத்தை அமல்படுத்தினார். ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் பம்பையில் அதற்கான பிரிண்ட்அவுட் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து அதற்கான ரசீதை பெற்றால் மரக்கூட்டத்தில் இருந்து சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானம் நடைப்பந்தலுக்கு வரமுடியும். இதன் மூலம் சரங்குத்தி வழியாக சென்று நீண்ட நேரம் கியூவில் காத்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது.இந்த ஆண்டுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு முழுமையாக முடிந்து விட்டது. மண்டல சீசன் தொடங்கி 21 நாட்கள் கடந்த நிலையில், இந்த வரிசை மூலம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 283 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். டிச., மூன்றாம் தேதி முதல் ஐந்து வரை மூன்று நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் இந்த வரிசையை பயன்படுத்தியுள்ளனர்.கேரள காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள இந்த ஆன்லைன் வசதியை பயன்படுத்த எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.