மறைக்கப்படும் சிற்பங்கள்: பக்தர்கள் ஏமாற்றம்
தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், சுவாமி தரிசனத்திற்கு பின்னர், சிற்பங்கள் மீது விபூதியை தூவி வருவதால், விபூதியால் மறைக்கப்படுகிறது. இதனால், சிற்பங்களை காண வரும் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். தாரமங்கலத்தில், கி.பி., 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, சிற்பக் கலைக்கு பெயர் பெற்ற, கைலாசநாதர் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், தரிசனத்திற்கு பின்னர், கோவிலில் கொடுக்கப்படும் விபூதி மற்றும் குங்குமத்தை, தங்களது நெற்றியில் பூசிக்கொண்டதுபோக, மீதம் உள்ளதை, கோவில் கற்தூண்கள் மற்றும் சிற்பங்கள் மீது தூவி விட்டு செல்கின்றனர். இதனால், சிற்பங்கள் அடையாளம் தெரியாமல் மறைக்கப்படுகிறது. மேலும் சிலர், கோவிலின் பல்வேறு இடங்களில், தீபம் ஏற்றி வருவதால், கோவில் வளாக தரைதளம் எண்ணெய் படர்ந்து, அழுக்கு படிந்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், கலை நயமிக்க கற்சிற்பங்களை, கண்டு ரசிக்க முடியாமலும், எண்ணெய் படர்ந்த தரை தளத்தில், வழுக்கி விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையை போக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.