உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் புனரமைக்கப்படுமா?

வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் புனரமைக்கப்படுமா?

ஆர்.கே.பேட்டை: பராமரிப்பு இன்றி கிடக்கும், வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலில், கொடிமரம் மற்றும் கோவில் கட்டுமானம் சிதைந்து கிடக்கிறது. இதை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பள்ளிப்பட்டு அருகே, கொற்றலை ஆற்றின் மூல நதிகளில் ஒன்றான, குசா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில்.

வெளிகரம் கிராமத்தின் வடக்கே, இயற்கை எழில் சூழந்த இந்த பகுதியில், உயர்ந்த மலையுச்சியில், சமதளத்தில் அமைந்துள்ள மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வர் கோவில், 100 ஆண்டுகள் பழமையானது. இந்த மலைக்கோவிலுக்கு, சீரான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டு வழியில், புடைப்பு சிற்பமாக எழுப்பப்பட்ட வழித்துணை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. 600 படிகளுக்கும் மேலாக, கரடு முரடான பாதை காணப்படுகிறது. மலை உச்சில், 5 ஏக்கர் பரப்பில், சமதளமான பரப்பு காணப்படுகிறது. சோமநாதீஸ்வரர் மற்றும் மரகதவள்ளி அம்மனுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தின் வடகிழக்கில், கால பைரவர் மற்றும் சூரியனார் கோவில்களும் உள்ளன. மர துாணால் அமைந்துள்ள கொடிமரம், மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்பட்டு, சிதைந்து வருகிறது. கோவில் கட்டடமும் மேற்பகுதியில் சிதைந்துள்ளது.

வெளி பிரகாரத்தில் அமைந்து உள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதி, மிகவும் எளிமையாக, கல்துாண்களுக்கு இடையே எழுப்பப்பட்டு உள்ளது. மூலவர் சோமநாதீஸ்வரர் லிங்கம், ராமேஸ்வரத்தில் உள்ளது போன்று உருவத்தில் மிகவும் சிறியது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் திங்கள் கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, வெங்கல்ராஜிகுப்பம், ஐ.வி.பட்டடை, சாணாகுப்பம், வெளிகரம், பள்ளிப்பட்டு, குமாரராஜிபேட்டை, பெருமாநல்லுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், ஆந்திர மாநிலம், சத்திரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உற்சவத்தின் போது தேவாரம் முற்றோதல் நடத்துகின்றனர். கோவிலின் பின்புறம், இயற்கையாக அமைந்து தீர்த்த குளம் உள்ளது. தென்மேற்கில் நாகாலம்மன் கோவிலும் உள்ளது. சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலுக்கு நேர் கிழக்கில், நெடியம் கஜகிரி மலை மீது செங்கல்வாரய சுவாமியும், தென் கிழக்கில், பொதட்டூர்பேட்டை மலை மீது விநாயகர் கோவிலும் அமைந்திருப்பது இறைவனின் மகிமை என, பக்தர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !