கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி: கார்த்திகை தீபத்தையொட்டி, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள், கள்ளக் குறிச்சி பகுதியில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில், கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினங்களில் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்தாண்டு வரும் 12ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதனையொட்டி, கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் 10க் கும் மேற்பட்ட குடும்பத்தினர், அகல்விளக்குகள் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஏரியிலிருந்து களிமண்ணை கொண்டு வந்து நன்கு ஈரப்பதத்துடன் குழைத்து, அகல் விளக்குகள் உற்பத்தி செய்கின்றனர். அதனை வெயிலில் உலர்த்தி, தீ வைத்து சுட்டு, விற்பனை செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் 500க்கம் மேற்பட்ட அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர். இவைகள், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு, ஒரு அகல் விளக்கு ஒரு ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.