உத்தமபாளையம் பெருமாள் கோயில் திருப்பணிகள் தொடர அனுமதி
உத்தமபாளையம்: நிலுவையில் இருந்த உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயில் திருப்பணி செய்ய அறிநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற யோக நரசிங்க பெருமாள் கோயில் உத்தமபாளையம் மெயின்பஜாரில் அமைந்துள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புராதானமான இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள இங்குள்ள ஓம்நமோநாராயாணா பக்த சபையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விக்கிரகங்கள் எடுத்து வைக்கப்பட்டு, திருப்பணி துவங்கியது. கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட், கர்ணம் ஹவுஸ், பழனிவேல்ராஜன், முத்துராமன் என பலர் பணிகளை எடுத்துச் செய்துள்ளனர்.ரூ. 1 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது.
ஆயினும் மடப்பள்ளி கட்டுவது, கொடிமரம் நிர்மாணிப்பது, கருடவாகனம் நிறுத்துமிடம், தரைத்தளம் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லை. இதற்கு அறநிலையத் துறையின் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக பக்தர்கள், நமோ நாராயணா பக்த சபையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். கோயில் செயல்அலுவலர் செந்தில்குமார் தீவிர முயற்சிகள் செய்து, எஞ்சிய திருப்பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தந்தார். அதன்படி ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கொடி மரம் நிர்மாணிப்பது, மடப்பள்ளி கட்டுமான பணிகள் துவங்குவது போன்றவை விரைவில் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.