உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனத்துக்கு பக்தர்கள் எட்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறுக்கு வழிகளை போலீசாரர் அடைத்தனர். சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி 25 நாட்கள் கடந்துள்ளது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்து தற்போது உச்சகூட்ட கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. சனி, ஞாயிறு விடுமுறையுடன் கேரளாவில் மிலாடிநபி தினவிடுமுறை இன்று (திங்கள்)சேர்ந்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கூட்டம் காணப்படுகிறது

சனிக்கிழமை காலை தொடங்கிய கட்டுக்கடங்கா கூட்டம் நேற்று மாலையிலும் அலைமோதியது. சபரிமலை வரும் எல்லா வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் போலீசார் திணறினர். இதை தொடர்ந்து மத்திய அதிவிரைவு படை போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் வரும் குறுக்கு பாதைகளை அடைத்து அனைவரையும் கியூவில் வர செய்துள்ளனர். சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன் பின்னர் சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி ஆகிய இடங்களில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். தொடர்ந்து சன்னிதானம் வரை இரும்பு தடுப்பு வேலிக்குள் கியூவில் நின்று தரினசம் நடத்தும் போது ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆகிறது. இவ்வாறு காத்திருந்து கியூவில் வரும் போது நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் பகல் ஒரு மணி முதல் 2.45 வரையிலும், இரவு 11 முதல் அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரையிலும் வரும் பக்தர்கள் 18-ம் படியேறிய பின்னர் வடக்கு வாசல் வெளியே அனுப்பப்படுகின்றனர். மீண்டும் இவர்கள் சில மணி நேரம் கியூவில் நின்று வடக்கு வாசல் வழியாக சென்று தரிசனம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. கூட்டம் அதிகரிப்பால் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் நடத்த முடியாத நிலை உள்ளது. சன்னிதானத்தில் முன்புறம் தேவசம்போர்டின் அனுமதி சீட்டு மூலம் 18-ம் படியேற வழங்கப்பட்டு வந்த சிறப்பு வழியும் தற்காலிககமாக மூடப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்த பக்தர்கள் பிரசாதம் பெற்று உடனடியாக பம்பை திரும்பும் படி ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !