திருவண்ணாமலை தீப திருவிழாவில் குளறுபடி திட்டமிடல் இன்றி அதிகாரிகள் அலட்சியம்
வேலுார்: அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால், திருவண்ணாமலை தீபத் திருவிழாவில், பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, நவ., 30ல் துவங்கி, வரும், 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், டிச., 3ல் கொடியேற்றம் துவங்கி, இன்று வரை, 10 நாட்கள், முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கோவில், மூலவர் சன்னிதியில், இன்று அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும்; மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா பணிகளை கவனிக்க, அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா மற்றும் கூடுதலாக, நான்கு இணை ஆணையர்களை, இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ளது. இருப்பினும், சுவாமி புறப்பாடு, பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன அனுமதி சீட்டு விற்பனை, தீபத் திருவிழா பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட எல்லா பணிகளிலும், குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். குறிப்பாக, அனுமதி சீட்டு கேட்டு, கோவிலுக்கு கட்டளைதாரர்களும், உபயதாரர்களும் படையெடுத்தனர். ஆனால், மாலை, 6:00 மணி வரை, அவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படவில்லை. பரணி தீபத்துக்கு, 4,000 பேரும், மகா தீபத்துக்கு, 6,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என்றும், நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
10 டன் காய்கறி: திருவண்ணாமலையில் இன்று பல இடங்களில், பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு உதவும் வகையில், வேலுார் நேதாஜி மார்க்கட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், எட்டு ஆண்டுகளாக, டன் கணக்கில் காய்கறிகள் இலவசமாக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி நேற்று, 10 டன் காய்கறிகள், வேலுாரில் இருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள், போட்டோகிராபர்கள், 100க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவதிலும், தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மாவட்ட எஸ்.பி., பொன்னி பேசுகையில், இத்தனை பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் வர வேண்டிய அவசியம் இல்லை; ஓரிருவர் மட்டும் வந்தால் போதும். பத்திரிகையாளர்களால் தான் கோவிலில் பிரச்னை ஏற்படுகிறது, என்றார். அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், எஸ்.பி., பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மாவட்ட காவல் துறை நிர்வாகம், தன் நிலையில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இது, பத்திரிகையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.