ஓங்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த் ரகசிய வழிபாடு
ADDED :3252 days ago
பள்ளிபாளையம்: கருமகவுண்டம்பாளையம் ஓங்காளியம்மன் கோவிலுக்கு, விஜயகாந்த் ரகசியமாக வந்து, சுவாமியை வழிபட்டு சென்றார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த, திருச்செங்கோடு சாலையில், கருமகவுண்டம்பாளையத்தில், பழமையான ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் பாதிப்பு உள்ளோர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஈரோட்டில் இருந்து ரகசியமாக கோவிலுக்கு வந்தார். உள்ளூர் நிர்வாகிகளுக்கு கூட தெரியப்படுத்தவில்லை. கோவிலில், 15 நிமிடங்கள் சுவாமியை பயபக்தியுடன் வழிபட்ட அவர், பின்னர் அங்கிருந்து சென்றார். ஜோதிடர்களின் ஆலோசனைபடி, ஓங்காளியம்மனை, விஜயகாந்த் வழிபட்டதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.