கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் விற்பனை ஜோர்
விழுப்புரம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விழுப்புரத் தில் அகல் விளக்குகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. தமிழகமெங்கும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று(௧௨ம் தேதி) கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, திருவண்ணாமலையில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் மார்கெட், திரு.வி.க., வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. விருத்தாசலம், அய்யூர் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்படும் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. கொத்து விளக்கு, கலச விளக்கு, உருளி விளக்கு, குடை, பூந்தொட்டி, மூடி போட்ட விளக்குகள், விநாயகர் படம் போட்ட விளக்குகள், கார் விளக்குகள் என பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அதே போல், தென்னமாதேவி, அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை பகுதிகளில் தயாராகிய கார்த்தி விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கார்த்திகை தீபத்தை யொட்டி அதிக அளவில் வந்துள்ள அகல் விளக்குகள் விற்பனை வழக்கமான உற்சாகத்துடன் சூடு பிடித்துள்ளது.