பழநி மலைக்கோயிலில் ’தீ’ விபத்தை தடுக்க ’நீர் தும்பிகள்’
 பழநி: பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தீ விபத்து தடுப்பு முன்எச்சரிக்கையாக “தீயணைப்பான், நீர் தும்பிகளை தீயணைப்புதுறையினர் பரிசோதனை செய்தனர். பழநி மலைக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. ’தீ’ விபத்தை தடுக்க தீயணைப்புதுறையினர் ஆலோசனையின்பேரில் நிரந்தரமாக வெளிப்பிரகாரத்தில் இரும்புகுழாய்களில் தண்ணீர் நிரப்பி 12 இடங்களில் பிரத்யோகமாக “நீர்தும்பிகள்” அமைக்கப் பட்டுள்ளது. இது மின்தடை நேரத்தில் இயங்கும் வகையில் ’ஜெனரேட்டர்’ மூலம் இயக்கப்படுகிறது. இன்று பெரிய கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோயிலில் அனைத்து சுவாமி சன்னதிகளில் கூடுதலாக விளக்குகள், வெளிப்பிரகாரத்தில் மின்விளக்கு அலங்காரம், ஸ்தபத்தில் தீபம் ஏற்றப்பட்டு, சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ’தீ’ விபத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பழநி தீயணைப்புநிலைய அலுவலர் மயில்ராஜ் கொண்ட குழுவினர் நீர் தும்பிகள், தீயணைப்பான், மின்மோட்டார் அறை உள்ளிட்ட இடங்களில் உள்ள கருவிகள் இயக்கி பரிசோதனை செய்தனர்.