மதுரை ராமகிருஷ்ண மடத்தில் மாணவிகளுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம்
மதுரை: ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம் 10.12.2016 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்த முகாம் மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பரமசுகானந்தர், திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் ஆர்.இளங்கோ, ஆடிட்டர் ஹெச்.ஆதிசேஷன், ஆகியவர்கள் மாணவிகளின் ஆளுமை வளர்ச்சி பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள்.இந்த முகாமில் மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:
மனிதனின் நல்ல எண்ணங்கள் மற்றவர்களைச் சென்று தாக்குகின்றன. அதுபோல் மனிதனின் தீய எண்ணங்களும் உலகில் சென்று தாக்கிப் போர், பூசல் கலவரம் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன. நாம் எண்ணும் நல்ல எண்ணங்கள் நம்மை உயர்த்துவதுடன் உலகிற்கும் நன்மை செய்கிறது. நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்த எண்ணங்கள் செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடி அடிக்கும் வரையிலும் அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவம் தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால், அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை. சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதன் ஒருபோதும் தவறு செய்வதில்லை.
எண்ணம் போல் வாழ்வு என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே ஒருவர் எண்ணும் எண்ணங்களுக்கு ஏற்றபடியே அவருக்கு வாழ்க்கை அமைகிறது. நாம் நல்ல எண்ணங்களை எண்ணினால், அதுவாகவே நாம் ஆகிவிடுகிறோம். அதுபோல் தீய எண்ணங்களை எண்ணினால், அதுவாகவே நாம் ஆகிவிடுகிறோம். நமது உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகள், அதே சிந்தனைகளை உடைய பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வேறொரு நாட்டில் உள்ள ஒருவனைச் சென்று தாக்க ¬முடியும். நமது எண்ணங்கள் அத்தகைய வலிமை வாய்ந்தவை. மனிதனிடம் எல்லையற்ற ஆற்றல்கள் புதைந்திருக்கின்றன. பூமியின் நிலப்பரப்பையும் கடலின் ஆழத்தையும் மனிதனால் கண்டறிய முடியும். ஆனால் மனித மனத்திற்கு உள்ள ஆற்றல் எந்த மனிதனாலும் கண்டறிய ¬முடியாத அளவிற்கு எல்லையற்ற ஆற்றல் வாய்ந்தது. நாம் ஒருவரைப் பற்றி நல்ல எண்ணங்கள் கொண்டிருந்தால் அந்த ஒருவரும் நம்மைப் பற்றி நல்லவிதமாகவே நினைப்பார். அதுபோல் நாம் ஒருவர் மீது வெறுப்பு கோபம் கொண்டால், அந்த ஒருவரும் நம் மீது அதே விதமான சிந்தனைகளைக் கொள்பவராக ஆகிவிடுவார். நாம் எண்ணும் நல்ல எண்ணங்களே நமது நல்ல நண்பர்கள். நாம் எண்ணும் தீய எண்ணங்களே நமக்குத் தீய நண்பர்கள், பெரிய எதிரிகள். நமது நல்ல மனம் நமக்கு உதவுவது போன்று, நமக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களாலும் நண்பர்களாலும் கூட நமக்கு நன்மை செய்ய முடியாது. நமது தீய மனம் நமக்குத் தீமை விளைவிப்பதைப் போன்ற தீமையை, நம்முடைய மிகப் பெரிய எதிரிகளாலும்கூட நமக்குச் செய்ய முடியாது. தேவையில்லாத குப்பைக் கூளங்களை நாள்தோறும் நாம் நமது வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிடுகிறோம். அதுபோல் தேவையில்லாத சிந்தனைகளையும் நாம் நம் மனதிலேயே வைத்துக்கொண்டிருக்காமல், அன்றன்றைக்கே நமது உள்ளத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். வாழ்க்கையில் போராட்டங்கள், துன்பங்கள், குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. அவற்றை நீங்கள் விவேகத்துடன் எதிர்த்து நின்றால் அவை உங்களிடமிருந்து ஓடியே போய்விடும்.
வாழ்க்கையில் சில சமயம் நீங்கள் எடுத்த சில முடிவுகள் தவறாக ஆகியிருக்ககூடும்; சில தோல்விகளை அல்லது ஏமாற்றங்களை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும். அதனால் நீங்கள் உங்களை உருப்படாதவர்கள், எதற்கும் லாயக்கில்லாதவர்கள், எதற்கும் பயன்படாதவர்கள் என்ற ¬முடிவுக்கு வந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு சமயம் செய்த சில தவறுகள், நாளைய உங்கள் வெற்றிகரமான வளமான எதிர்காலத்தை ஒரேடியாக நசுக்குவதற்கு, அல்லது அழிப்பதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு தனித்தன்மையை, ஒரு தனித்திறமையை, ஒரு தனிச் சிறப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த உங்களுடைய தனித்தன்மையை நீங்கள் கண்டறிந்து வளர்த்துக்கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் வளம் பெற முடியும். மனதைச் சிறிது சிறிதாக ஒருமுகப்படுத்துவதற்கு உரிய பயிற்சிகளைச் செய்யுங்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவரையும், தாழ்ந்த நிலையில் இருப்பவரையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால் அவர்களுக்கிடையில் இருக்கும் உள்ள வேறுபாடு மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலின் அளவில்தான் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஆரம்பத்தில் தீய பழக்கங்கள் இன்பம் தருவது போன்று இருக்கும். ஆனால் அவை முடிவில் உங்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். இதற்கு மாறாக நற்பண்புகளைக் கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் துன்பம் தருவது போன்று இருந்தாலும், முடிவில் அவை உங்களுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியை, பெரிய மகிழ்ச்சியைத் தரும். வெற்றிக்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று உழைப்பு, இரண்டு கடின உழைப்பு, மூன்று மிகவும் கடின உழைப்பு. இவ்வாறு சுவாமி கமலாத்மானந்தர் சொற்பொழிவாற்றினார்.