குன்றக்குடியில் கார்த்திகை தீப திருவிழா
 காரைக்குடி: குன்றக்குடியில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. சண்முகநாத பெருமான் ஆறு திருமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ள சிறப்பு வாய்ந்தது குன்றக்குடி. மயிலின் வடிவமாக காட்சியளிக்கும் இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியானது கார்த்திகை தீப திருவிழா. இவ்விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 11.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சந்தன அபிேஷகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன் பிறகு சுவாமி கார்த்திகை மண்டபத்துக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு மகா தீபத்தின் திரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆதின மடத்தின் முன்பு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தீபாராதனையை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மலை தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. காரைக்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, திருப்பத்துார் மட்டுமன்றி தொண்டி, மீமீசல், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.