ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் திருக்கார்த்திகை கோலாகலம்
 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேம் நடந்தது. காலை 10 மணிக்குமேல் சுவாமி, அம்பாள், சோமஸ்கந்தர்,வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் ஆகியோர்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபராதனை செய்யப்பட்டன. இரவு அம்பாள் சமேத சோமாஸ்கந்தர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் ரதவீதியுலா, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல் நகரில் பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 
விருதுநகர்: திருக்கார்த்திகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள கோயில்கள், வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இரவு 9 மணிக்கு கோயில் முன் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. வீடுகளில் பூஜை அறை, வீட்டு முன் குத்துவிளக்கை வைத்து அதை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டது. வீட்டு வளாகங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. 
ராஜபாளையம்: ராஜபாளையம் சஞ்சீவி மலையில் நேற்று இரவு தீபம் ஏற்றப்பட்டது.இதை நகரை சுற்றி 3 கி.மீ., சுற்றளவில் கண்ட பக்தர்கள் தரிசித்தனர்.இதுபோல் வீடுகளில் தீபம் ஏற்றி கொழுக்கட்டை செய்து சுவாமிக்கு வழிபாடு செய்து வணங்கினர்.