விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை ஜோதி பக்தர்கள் வழிபாடு
திருப்பூர் : திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ஜோதி ஏற்றப்பட்டது. அனைத்து வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், அகல் விளக்கு ஏற்றி, பெண்கள் வழிபட்டனர். ஜோதி மயமான ஈசனை, வழிபடும் முக்கிய பண்டிகையான, திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், நேற்று மாலை, 6:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களின், "ஓம் நமசிவாயா கோஷம், முழங்க சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருப்பூரிலுள்ள வீடுகள், பனியன் கம்பெனிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில், அகல் விளக்கில், நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனர். வீடுகளுக்கு முன், வண்ண கோலமிட்டு, அகல் விளக்குகளும், பல வடிவ விளக்குகள் ஏற்றப்பட்டதால், எங்குள் ஒளி மயமாக காட்சியளித்தது. அவிநாசி, திருமுருகன் பூண்டி உள்ளிட்ட கோவில்களில் இன்று ஜோதி ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சிகளும், நாளை பெருமாள் கோவில்களில், கார்த்திகை ஜோதி ஏற்றுதலும் நடக்கிறது.