கார்த்திகை தீபத்திருவிழா: கரூர் கோவில்களில் கோலாகலம்
குளித்தலை: கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, குளித்தலை அடுத்த கடம்பர்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல், குளித்தலை மாரியம்மன் கோவில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர் கோவில், மேட்டுமருதூர் செல்லாண்டியம்மன் கோவில், ராஜேந்திரம் மதுரை வீரன், மலையாளி கோவில், சிவாயம் சிவபுவனேஸ்வர் கோவில், தோகைமலை கருப்புகோவில் போன்ற கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த கோவில்களின் முன், மிகப்பெரிய அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீபத்தில் உப்பு போட்டு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர். லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில், கார்த்திகை தீபம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை, 6:30 மணியளவில், கோவில் முழுவதும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின், பனைமட்டை மூலம், சொக்கப்பனை பூஜை செய்து, தீபம் ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.