கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தேரி குடியிருப்பு கற்கு வேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேரி குடியிருப்பு செம்மணல் பரந்த அடர்ந்த வனப்பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார், பூரணம், பொற்கலை இரு தேவியருடன் காட்சி தருகிறார். இங்கு பேச்சியம்மன், சுடலைமாடன், பெரியாண்டவர், வன்னியராஜா, பொன்காத்த அய்யன் போன்ற கணக்கற்ற தேவைதைகளும் வீற்றிருக்கின்றன. இப்பகுதியில் அநீதிகள் தலை துாக்கியபோது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யன். அந்த நாள் கள்ளர்வெட்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளர் வெட்டு திருவிழா கடந்த நவ.16 ம் தேதி பகல் 12 மணியளவில் அய்யனுக்கு சிறப்பு அபிேஷகம் பூஜைகளுடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், மாக்காப்பு, தீபாரதனை, மாவிளக்கு, திரு விளக்கு பூஜைகள் நடந்தது. உற்சவர் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவில் நேற்று காலை 6 மணிக்கு பால்குடம் எடுத்தனர். தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வந்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 4.45 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் இளநீர் வைக்கப்பட்டது. இந்த இளநீரை கோயில் பூசாரி வெட்டினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின் அப்பகுதியில் இருந்து பனித மண் சேகரித்து சென்றனர்.