வைணவ வழிபாடு!
திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடுவதே வைணவ சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. உலகில் தீமைகள் நிகழும்போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான திருமால் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் எடுத்ததாகவும் அவை தசவதாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமால் ஐவகை நிலப்பாகுபாட்டுகள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) முல்லை நிலமக்களால் போற்றி வணங்கப்பட்டவராகக் கருதப்படுகிறார். வைணவ வழிபாட்டைப் பற்றி கூறுவதாக இப்பகுதி அமைகிறது.
அகவழிபாடு:
அகம் என்றால் உள்ளம், உள்ளத்தின் கண் இறைவனை வைத்து மனத்தால் தியானித்து இறை நாமத்தினை இடைவிடாது செபித்தலே அகவழிபாடு ஆகும்.
நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைபெற்றேன்.
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெருசத்து...
என்று பேயாழ்வார் அகவழிபாட்டின் உயர்வைச் சிறப்பித்து கூறுகிறார். நாராயணா என்னும் மந்திரத்தை நாவால் உச்சரித்து, மனத்தால் தியானித்து இறைவனோடு இரண்டற கலந்தவர் இராமானுசர் ஆவார்.
ஓம் நமோ நாராயணா என்னும் எட்டு எழுத்து மந்திரமே வைணவர்களின் நாவில் என்றைக்கும் வேதமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
அ+உ+ம் = ஓம் எனலாம். இதில்,
அ - இறைவன் காரணமாயிருக்கும் தன்மையையும்
உ- இறைவனின் காக்கும் தன்மையையும்
ம்- இறைவனின் தலைமைத் தன்மையையும் குறிக்கும். அதுபோல,
நாரா - அழியாப் பொருள்
அயண- இருப்பிடமாய் உள்ளவன்
ஆய - எல்லாவிதமான தொண்டுகளையும் செய்யும் கடமையுடையவனாய் இருப்பவன் எனப் பொருள்படும்.
அழிவு, நிலைப்பொருள் அத்தனைக்கும் இருப்பிடமாய் உள்ள நாராயணனுக்கு அனைத்துத் தொண்டுகளையும் செய்யக் கடவேன் ஆகுக என்று வைணவர்கள் வழிபட்டு வாழ்கிறார்கள். அகவழிபாட்டில் இறை நாமத்தை உச்சரித்தல் என்பதும் உண்டு. இறைவன் தொலைவில் இருந்தாலும் பக்தர்கள் மனத்தால் தியானித்து எம்பெருமான் திருநாமத்தை உச்சரிக்கையில், இறைவன் அவர்கள் அருகில்வந்து துன்பத்தை நீக்குவார் என்று வைணவப் பெரியவர்கள் நம்பியே நாராயணா, கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா, இராமா... என்று திருமாலின் பல்வேறு திருநாமங்களை உச்சரித்து வாழ்கின்றனர்.
புறவழிபாடு:
புறச்செயல்பாடுகளின் மூலம் இறைநாமத்தை உச்சரித்தலும், இறைவன் புகழ் பாடுதலும், இறைவனோடு ஐக்கியப்படுதலுமே புறவழிபாடாகும். இறைவனின் இருப்பிடத்தைத் தூய்மை செய்தல், பூமாலை சார்த்துதல், தீபம் ஏற்றுதல், தேங்காய் உடைத்தல், அபிஷேகம் செய்தல், பொங்கலிடல், காவடி எடுத்தல் முதலான பலவும் புறவழிபாட்டைச் சார்ந்தவையாகும். மேலும் வைணவத் திருக்கோயில்களிலே நடத்தப்படும்.
விடியற்காலைப் பூசை (உஷ்ணக்காலம்)
சந்தி காலப் பூசை (காலை)
உச்சிக் காலப் பூசை (நண்பகல்)
மாலை காலப் பூசை ( பிரதோடகாலம்)
சாயங் காலப் பூசை ( சாயரட்சை)
நள்ளரவு காலப் பூசை (அர்த்த சாமம்) இந்த ஆறுகாலப் பூசையும் வைணவப் புறவழிபாட்டுத் தன்மையைக் காட்டுவதாக அமைகின்றன. திருமால் கோயிலிலே நெய்தீபம் ஏற்றுவது புண்ணியச் செயலாகவும் கருதப்படுகிறது.
அதுபோல திருமாலைக் காலையில் வணங்கினால் துன்பங்கள் நீங்கும் என்றும், உச்சி வேளையில் வணங்கினால் பிணி அகலும் என்றும், மாலையில் வணங்கினால் ஏழு பிறவிக்குமான தீமைகள் நீங்கி நன்மை கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் வைணவ வழிபாட்டு நெறிமுறைகளிலே அட்டாங்கப் பணிவு, பஞ்சாங்கப் பணிவு, அடிப்பிரதட்சணம், அங்கப் பிரதட்சணம் முதலியனவும் சிறப்பிடம் பெறுகின்றன.