உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணரின் துறவு

கிருஷ்ணரின் துறவு

அகங்காரத்தினால் யது குலத்தினர் ரிஷிகளை அவமதித்தனர். விளைவு? அவர்களது சாபம். அதன் அறிகுறியாக தீய நிமித்தங்கள் உண்டாயின. பரிகார பூஜை செய்யும் பொருட்டு பிரபாச க்ஷேத்திரத்தில் அனைவரும் கூடினர். பூஜையின் முடிவில் மது அருந்தி கேளிக்கைகளில் ஈடுபட்டனர். அதனால் கிருஷ்ணரின் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடையே வாக்குவாதம் முற்றி, பெருத்த சண்டை ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாண்டனர். கிருஷ்ணரோ ஓர் ஆலமரத்தின் அடியில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நண்பரான உத்தவ சுவாமிகள் சண்டையைக் காணச் சகிக்காமல் கிருஷ்ணரிடம் வந்து முறையிட்டார். கிருஷ்ணா, நாம் அன்புடன் வளர்த்த குழந்தைகளெல்லாம் நம் கண் முன்னாலேயே சண்டையிட்டு மடிகின்றன. இந்த அமங்கலத்தைக் கண்டும் எப்படி நீ சாந்தமாக இருக்கின்றாய்? என்றார்.

கிருஷ்ணர் புன்னகை பூத்தார். நான் பிறப்பே இல்லாதவன். என்னைத் தவிர இரண்டாவதாக ஒன்றுமே இல்லாத போது எனக்கு எப்படி குழந்தைகள் பிறக்க முடியும்? நிலையற்ற இந்த உலகில் எது மங்களம்? எது அமங்களம்? ஏன் இந்த அறியாமை உனக்கு? என்று கேட்டார். கிருஷ்ணரின் இந்த அற்புதமான பற்றற்ற நிலையைக் கண்ட உத்தவர், என்ன இது! கிருஷ்ணனுக்குப் பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட மனைவிகள் உண்டு. ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பல்லாயிரக்கணக்கான பேரன் பேத்திகளும் கொண்டு மகாகுடும்பியாக இல்லற தர்மத்தைச் செவ்வனே நடத்தியவர். அவர் சொல்லும் வார்த்தைகளா இவை! இது எப்படிச் சாத்தியம்? என்று வாயடைத்துப் போனார். கிருஷ்ணா, இந்தப் பற்றற்ற நிலையை அடைய எனக்கும் வழிகாட்டு என்று அவரிடம் சரணடைந்தார். உலகில் நீ காணும் சொந்தம், பந்தம் போன்ற இருமைகள் யாவும் என் மாயா சக்தியின் விளையாட்டுகளே. எதுவரை மனித சமுதாயம் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றதோ அதுவரை இந்த விளையாட்டு தொடரும். யது குலத்தினர் தர்மத்துடன் வாழ்ந்தவரை அவர்களை நான் காத்து வழிநடத்தினேன். ஆனால் தற்பொழுது அவர்கள் செய்த அதர்ம காரியங்களே அவர்களை அழிக்கிறது.

மேலும் தத்வார்த்தமாகப் பார்த்தால் பரமாத்மாவாகிய நான் மட்டும் உண்மை. எல்லா ஜீவன்களாகவும் ஜடப் பொருள்களாகவும் நான் ஒருவனே இருக்கிறேன். உனது உண்மை சொரூபமும் நானே என்ற ஆத்ம ஞானத்தில் திளைத்து, இந்த நிலையற்ற உடலை மையமாக வைத்து உண்டாகும் நான், எனது என்ற பந்தத்திலிருந்து விடுதலை பெறு என்றார். ஆத்ம ஞானத்தினால் மனிதன் அடையக் கூடிய இந்தத் துறவையே சாஸ்திரங்கள் வித்வத் சன்னியாசம் என்கின்றன. இந்தத் துறவையே வாழ்வின் லட்சியமாக அர்ஜுனனுக்கும் உத்தவ சுவாமிகளுக்கும் உபதேசமாக வழங்கிய கிருஷ்ணர் தம் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். இத்துறவுதான் மகாகுடும்பியாக இருந்தாலும் கிருஷ்ணரின் வெற்றிகரமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம். நாம் இருவர்; நமக்கு இருவர் என்று ஒரு சிறிய குடும்பத்தில் வாழ்ந்தாலும் நான், எனது என்கின்ற பற்றினால் மனிதர்கள் படும் துன்பங்களைக் காணும் சாதுக்களுக்கோ கருணை பிறக்கிறது.

அந்தோ பரிதாபம்! இப்படி ஆசை வலையில் சிக்கி அதர்மத்தைப் புரிந்து மக்கள் துன்பப்படுகின்றார்களே! இதிலிருந்து விடுதலை பெறும் வழி இதோ என்று பொய்யாமொழிப் புலவர் வழிகாட்டுகிறார்:

பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு    (குறள்: 350)

பற்றற்ற இறைவனை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அதுவே வழி.

எனவே பகவானிடம் சரண் புகுந்து தர்மத்தைக் கடைப்பிடித்து உலகப் பற்றுகளிலிருந்து விடுதலை பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !