உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணவேணி புஷ்கரம்

கிருஷ்ணவேணி புஷ்கரம்

கிருஷ்ணவேண்யம் தரிஷ்யன்தி கன்யாயுக்தே பிரகஸ்பயதௌ
ஸ்னானாத் த்ரிசப்த புருஷம் பித்ரு மாத்ரு புரோத்பவஹ

குரு (வியாழன்) கன்னி ராசியில் பிரவேசிக்கும் வேளையே கிருஷ்ணா நதிக்கு புஷ்கர காலமாகும். கிருஷ்ணா நதியில் புஷ்கர காலத்தில் புண்ணிய ஸ்நானம் செய்தால், ஒருவனின் தாய், தந்தை வழி 21 ஜென்மத்தவருக்கும் அருள் கிடைக்கும் என்பது மேலே குறிப்பிட்ட ச்லோகத்தின் பொருளாகும். கிருஷ்ணா நதிக்கு பல கிளை நதிகள் உள்ளன. மஹாராஷ்டிர மாநிலத்தில் வேணி, வருணா, கோயினா, பஞ்ச கங்கா, கடபிரபா, மலபிரகா, பாமா, இந்திராணி, தேல், கௌசிகி, வைஷ்ணவி, நாராயணிமலாபஹாரிணி மற்றும் பீமா போன்றவை இன்றியமையாத கிளை நதிகளாகும். கர்னாடகத்தில் துங்கா, பத்ரா, சிவமுகி, வேத்ரவதி, குமுதவதி, இந்திரா, வரதா, பம்பா, ஹகரி, ஹந்ரி ஆகிய நதிகள் முக்கிய கிளை நதிகள். மேலும் ஆந்திர மாநிலத்தில் துங்கபத்ரா, திண்டி, முனியேரு, வைரா, மூசி, அகல்யா, சந்திரவங்கா, நாகுலேரு, பாதாலகங்கை ஆகியவையும் இந்நதியில் இணைகிறது.

மஹாபலேஸ்வர் என்ற இடத்தில் தோன்றும் கிருஷ்ண நதி நீண்ட பயணத்திற்கு பிறகு தீவிசீமா பகுதியில் கடலில் கலக்கிறது. எண்ணிலடங்கா புண்ணிய க்ஷேத்திரங்கள் இந்நதிக்கரையில் அமைந்துள்ளன. அமலகா, பைரவா, விகாம்கமா, வாசுகி, ஜோபதா, மார்க்கண்டேயா, சங்கமா, அனராதா, சப்தசாகரா, பாரதி, சங்கமேஷ்வரா, அலம்புரம், சைலம், நாகார்ஜுனகொண்டா, வேதாத்ரி, மாசேர்லா, அமராவதி, மிட்டபள்ளி, வாடபள்ளி, கௌதவரம், வைகுண்ட்டபுரம், இந்த்ர கீளாத்திரி, உண்டவள்ளி, காகுளம், மொவ்வா, மோபிதேவி, பெத்தமுத்தேவி ஆகிரிபள்ளி, பெத்தகத்ரலேபள்ளி, பெதபுலிவர்ரு, ஹம்சல தீவி போன்றவை சில முக்கிய க்ஷேத்திரங்களாகும். துவாபர யுகத்தில் மகாஜ்வால பிரளயம் ஏற்பட்டது. உலகில் உள்ள எல்லா பொருட்களும் கடலில் கலந்து கிருஷ்ணா அவதாரம் நிறைவு பெற்று வைகுண்டம் அடைந்தார் மஹாவிஷ்ணு. மீண்டும் தன்னுடைய ஆதிக்கத்தை தொடங்கிய பிரம்ம தேவன், கிருஷ்ண அம்சம் நிறைந்த நதி ஒன்று பூவுலகத்திற்கு வழங்க வேண்டும் என்று விஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவர் வேண்டுதலை ஏற்று உருவானதே இந்த கிருஷ்ணா நதி. இந்நதியை ப்ரஹ்ம புத்ரி என்று கிருஷ்ணா நதியை தனது மகளாக பிரம்மா ஏற்றுக்கொண்டார்.

கலியுகத்தில் பிரம்ம தேவனின் படைப்பு விரைவாகவும் எல்லையற்றும் நிகழ்ந்து கொண்டிருந்தது. மக்களின் பாவங்களை போக்க, கிருஷ்ண நதியை விஷ்ணுமூர்த்தி பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க அனுப்பினார். கிருஷ்ணா நதி தன் மீது பாய்ந்தோடவேண்டும் என்று சகயமுனி வேண்டிக்கொண்டார். சக்யமுனி மலையாக உருவெடுத்தார். அதுவே சஹ்யாத்ரி மலை. வெள்ளை அரசரமாக விளங்கிய கிருஷ்ணா நதியே வேதகிரி மலையின் மேலிருந்து கிருஷ்ணா நதி ஓடுகிறது. அந்நதி கிருஷ்ணர் அம்சமான அந்த அரசமரத்தை தொட்டு, சிவாம்சமான வேணி மரத்தை தொட்டு செல்கிறது. அதனால் அந்நதி சிவவிஷ்ணு அருளைப் பெற்று கிருஷ்ணவேணி என்ற பெயரினை பெற்றது. இந்நதி மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்னாடகா மாநிலங்கள் வழியாக செல்கிறது. கங்கையில் குளிப்பதை விட கிருஷ்ணாவில் குளித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதை அறிந்து இந்த மங்களகரமான கிருஷ்ணவேணி புஷ்கர வேளையில் நம் பாவங்களைப் போக்கி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !