உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேரனின் பூர்வ ஜன்மம்

குபேரனின் பூர்வ ஜன்மம்

காசி காண்டத்தில் குபேரனது பெருமை பேசப்படுகிறது. ஒரு ஜென்மத்தில் இவர் எலியாகப் பிறந்து ஒரு சிவன்கோயிலில் வசித்தபோது பாம்பு இவரைத் துரத்த, பாம்புக்கு பயந்து சிவன்கோயிலுக்குள் சென்று விளக்கின் மேல் ஏறியதாகவும், அங்கு அணைய இருந்த விளக்கு இவர் அசைத்ததால் மீண்டும் பிரகாசமாக எரியத் தொடங்கியதாகவும், இதனால் திருவிளக்குப் போட்ட புண்ணியம் கிடைத்தது எனவும், அதனால் குபேரனாகப் பிறந்ததாகவும் சொல்லுவார்கள் (மகாபலியின் பிறப்புக்கும் இப்படியொரு கதை சொல்லப்படுவது உண்டு.)

மற்றொரு புராணத்தில் இவர் வராஹ கல்பத்தில், காம்பிலி தேசத்தில் வேள்வி தத்தன் என்பவருக்கு குணநிதி என்ற பெயருடன் பிறந்து அவரின் பெருஞ்செல்வத்தை சூதிலும், மாதிலும் தொலைத்ததாகக் கூறுவார்கள். நல்ல பெண்ணை இவருக்குத் திருமணம் செய்து வைத்தும் இவர் திருந்தவில்லை. பின் குடும்பத்தினர் இவரை விலக்கி வைத்ததாகவும், இவர் வறுமையில் வாடியதாகவும் சொல்வர்.

பின்னர், ஒரு சிவராத்திரியில் சிவபக்தர்களுடன் சேர்ந்து சிவன்கோயில் சென்றார். அங்கு சன்னிதானத்தில் பூஜைகள் முடிந்து அனைவரும் உறங்கும்போது சிவன் சன்னிதிக்கு சென்று, அங்கு இருட்டாக இருந்ததால், அங்கிருந்த விளக்கை நன்கு எரியச் செய்துவிட்டு, தாங்கமுடியாத பசியின் காரணமாக சிவனுக்கு நைவேத்யம் செய்த பிரசாதங்களை உண்டார். பின் திரும்பி வருகையில் அங்கிருந்த காவலர்களால் பிடிக்கப்பட்டு கள்வன் எனக் கூறி கொலை செய்யப்பட்டார்.

அகால மரணம் அடைந்தவரை யமகிங்கரர்கள் பிடித்து யம லோகம் இழுத்துச்செல்ல முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த சிவகணங்கள் இவரை நீங்கள் அழைத்துச் செல்ல முடியாது. இவர் சிவராத்திரி அன்று கண் விழித்தார். சுவாமிக்கு திருவிளக்கை ஏற்றினார். சுவாமி பிரசாதத்தை உண்டார். அதன் பலனாக பெரும் புண்ணியம் பெற்றார். இவர் செய்த பாபங்கள் மறைந்தன. அடுத்த பிறவியில் பெரும் அரசனாகவும், சிவபக்தனாகவும் பிறக்கப் போகிறார் என்று கூறி அழைத்துச் சென்றதாக திருக்கதை உண்டு.

புராணங்கள் கூறும் குபேர சரிதம்: பிரம்மதேவரின் மானச புத்திரர் புலஸ்தியர். புலஸ்தியரின் புத்திரர் விச்ரவசு. இவர், சிறந்த சிவபக்தர் என்பதால், சிவபெருமானைக் குறித்து ஒரு வேள்வி செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு திரேதாயுகம் ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமை பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி மீன லக்னம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தனர்.

தந்தையைப் போலவே வைஸ்ரவணனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றுப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினார்.

வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான். அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்ம தேவன், அவன் முன் காட்சி தந்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்? என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார். இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். குபேரனின் மனைவி சித்ரரேகை. பிள்ளைகள் நளகூபரன், மணிக்கிரீவன் ஆகியோர் ஆவர். பிரம்மாவின் அருளால் சகல செல்வங்களுக்கும் அதிபதியான குபேரன் இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !