உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து என்று போற்றப்படுகிறது: முன்னாள் நீதிபதி உபன்யாசம்

திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து என்று போற்றப்படுகிறது: முன்னாள் நீதிபதி உபன்யாசம்

புதுச்சேரி: வேதத்திலும், புராணத்திலும், பிரபந்தத்திலும் சொல்லியுள்ள ஸ்ரீமத் நாராயணின் பரத்துவத்தை ஆண்டாள் பாசுரத்தில் ஊழி முதல்வன் என்று அடையாளம் காட்டுகிறாள். அதனால்தான் திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து என்று போற்றப்படுகிறது என முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசினார். புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில், வேதாந்த தேசிக சபை சார்பில், நேற்று நடந்த நான்காம் நாள் மார்கழி மஹோற்சவ திருப்பாவை உபன்யாசத்தில், முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் நாடு செழிக்க மழையை அருளுமாறு வேண்டுகிறாள் ஆண்டாள். மழை பொழிய வைக்க ஒரு பெரிய மந்திரம் இந்த பாசுரம். இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் உள்ளுறைப் பொருளாக உள்ளது. மேகத்தில் நீர் மறைத்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும் பரமனே அந்தர்யாமியாக உறைத்துள்ளான் என்பதை குறிக்கிறது. ஆழி என்றால் வட்டம், சுழற்சி என்று பொருள் உண்டு. எனவே இந்த பாசுரத்தின் ஆழி என்ற சொல்லை மழைக்கான வட்டம் அல்லது சுழற்சி என்று கொள்ளலாம்.

கார்முகில் வண்ணனான திருமாலின் திருமேனி நிறமான கருமை என்பதற்கு காருண்யம் என்றும் பொருள் உண்டு. மேகம் நீர் பொழிந்தால் வெளுக்கும். ஆனால் பகவானின் காருண்யம் குறையவே குறையாது என்பதால் பகவான் எப்போதும் கருமை. மாதவன், கேசவன், தாமோதரன், பத்மநாபன், நாராயணன், கோவிந்தன் என்ற திருநாமங்கள், திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப் பெற்றிருந்தாலும், கிருஷ்ணாவதார நிகழ்வுகள் பல இடங்களில் சுட்டப்பட்டிருந்தாலும், இப்பாசுரத்தில் தான் கிருஷ்ணாவதார பெயரான கண்ணா என்பதை ஆண்டாள் விளித்துப் பாடுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கணமும் இப்பாசுரத்தில் ஓங்கி நிற்கிறது. இதில் தமிழுக்கே சொந்தமான ழ என்ற எழுத்து 11 முறை வருவதை காணலாம். இதுவும் மற்றொறு சிறப்பு. இதன் மூலம் சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார்.

பெரியாழ்வாரின் குழல் இரண்டு என்று தொடங்கும் பாசுரத்தில் ழ பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடியவர்கள் உய்ய ஆசார்யனான ராமானுஜர், சிஷ்யர்களுக்கு அனுக்கிரஹ மழை பொழிந்து வழிபடுத்தினார். வாழ உலகினில் பெய்திடாய் என்று வேண்டி பெருவெள்ளம் வந்து அழிவேற்படாத வகையில் மழையை அருளுமாறு வேண்டுகிறாள் ஆண்டாள். இந்த பாடலிலும் நீராட வாருங்கோள் என்று வையத்து வாழ்வார்களை அழைக்கிறாள் . பிறவிக் கடலில் சம்சார சாஹரத்தில் மூழ்க்கிக் கிடக்கும் ஆன்மர்களே, பகவத் அனுபவம் எனும் கடலில்- சம்சார சாஹரத்தில் மூழ்கித் திளைத்து உள்ளத்தில் எதையும் கரவாமல்- மறைக்காமல் உள்ளத்து மாசு நீக்கி பகவானையே ஸ்மரனை பண்ணி மகிந்திடுவோம் என்று ஆண்டாள் அழைக்கிறாள். வேதத்திலும், புராணத்திலும், பிரபந்தத்திலும் சொல்லியுள்ள ஸ்ரீமத் நாராயணின் பரத்துவத்தை ஆண்டாள் இந்த பாசுரத்தில் ஊழி முதல்வன் என்று அடையாளம் காட்டுகிறாள். அதனால்தான் திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து என்று போற்றப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !