காரணமின்றி எதுவும் நடப்பதில்லை!
இவர் செல்வச் சிறப்புடன் வாழ்கிறார், நமக்கு அல்லாஹ் எதையும் தருவதில்லை, இவருக்கு படிப்பு நன்றாக வருகிறது. நமக்கு தலையில் எதுவும் ஏற மறுக்கிறது... இப்படி அடுத்தவர்களை தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் உலகம் இது. இத்தகைய ஒப்பீடு கூடாது என்கிறார் நபிகள் நாயகம், “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன் அளவு முறையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. புத்திக்கூர்மையாக இருப்பதும், புத்திக்குறைவாக இருப்பதும் கூட” என்று அவர் சொல்கிறார். சிலருக்கு புத்திசாலித்தனம் இல்லை என்றால், அதற்கு கூட ஏதோ ஒரு காரணத்தால் தான், அல்லாஹ் ஒருவரை அப்படி படைத்திருக்கிறான் எனப் பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அதிகம் படித்தவர்கள் புத்திசாலி அல்லாதவர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. மனிதன் தனக்கு அல்லாஹ் தந்துள்ள விஷயங்களுடன் திருப்தி கொள்ள வேண்டும். “மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது (இறைவன் தனக்கு தந்துள்ளவற்றின் மீது) திருப்தி அடைவதாகும். மனிதனுக்குரிய தீமை அல்லாஹ்விடம் நன்மையை வேண்டுவதாகும் (இவரைப் போல் எனக்கும் வேண்டும் என ஆசையுள்ள மனதுடனோ, பொறாமையுடனோ இறைவனை வேண்டுதல்). இன்னும் மனிதருக்குரிய தீமை அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தி அடைவதாகும். இந்த விதியை மாற்ற ஏதாவது வழி இருக்கிறதா என அண்ணல் நாயகத்தை கேட்டால், துஆ பிரார்த்தனையை விட வேறு எதுவும் விதியை மாற்ற முடியாது,’’ என்று சொல்கிறார். ஆம்... நாம் அன்றாடம் இறைவனை தொழுவோம், அவன் தரும் இன்ப, துன்பங்களை ஏற்போம். அவற்றை இனிமையான முகத்துடன் அனுபவித்து வந்தாலே, கருணையுள்ள இறைவன் நம் துன்பங்களை குறைக்க வழி செய்வான்.