உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மண்டல பூஜைக்காக புறப்பட்டது தங்க அங்கி

சபரிமலையில் மண்டல பூஜைக்காக புறப்பட்டது தங்க அங்கி

சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில் மண்டலபூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்படும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது.

சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி இந்த பவனி பம்பை வந்தடையும். நேற்று அதிகாலை ஐந்து மணி முதல் கோயில் முன்புறம் இந்த அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் 7:30 -க்கு அங்கி சபரிமலை மாதிரி ரதத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. நேற்று இரவு ஓமல்லுார் பகவதி கோயிலில் இந்த பவனி தங்கியது, இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலில் தங்குகிறது. நாளை காலை அங்கிருந்து புறப்படும் பவனி இரவு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்குகிறது. 25-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மதியம் மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். 25 மாலை 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சரங்குத்தியில் அங்கிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !