தபால் அலுவலகத்தில் கங்கை நீர் விற்பனை
ஆண்டிபட்டி ஆண்டிபட்டி தபால் அலுவலகத்தில் கங்கை நீர் விற்பனை துவக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் வழிபாடுகளில் இந்துக்கள் கங்கை நீரை புனிதமாக கருதி பயன்படுத்தி வருகின்றனர். ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்லும் பலரும், இந்நீரை பாட்டில்களில் கொண்டு வந்து வழிபாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் மத்திய அரசு , கங்கை நீரை தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்தது. தற்போது ஆண்டிபட்டி தபால் நிலையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்டிபட்டி போஸ்ட் மாஸ்டர் செல்லத்துரை கூறியதாவது: ’கங்கா ஜல்’ என்ற பெயரில் 500 மி.லி., கொண்ட புனித கங்கை நீர் பாட்டில் ரூ. 22க்கு விற்பனை செய்யப்படுகிறது. போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேனி,ஆண்டிபட்டி,பெரியகுளம், போடி உட்பட குறிப்பிட்ட சில தபால் அலுவலகங்களில் விற்பனை செய்ய தபால் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,என்றார்.