திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலையில் பிரம்மாண்ட பந்தல் அமைப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், யாக சாலை அமைந்துள்ள பகுதியில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 2002ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதற்காக, அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, கடந்த ஆண்டு ஜன., 26ல் பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, 27 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபி?ஷக பணிகள் துவங்கி நடந்து வந்தது. கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகள், கோபுரங்களில் மராமத்து பணிகள் நடந்து, வர்ணம் பூசப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும், 2017 பிப்., 6ல் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகளை துவங்க, கடந்த மாதம், 20ல் பந்தக்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து, ஐந்தாம் பிரகாரத்தில், யாகசாலை அமைப்பதற்கான பணி துவங்கியது. இடையில் கார்த்திகை தீப திருவிழா வந்ததால், கும்பாபிஷேக பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது தீப திருவிழா முடிந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான பணி சுறுசுறுப்படைந்துள்ளது. யாக சாலை அமைக்கப்பட்டுள்ள, ஐந்தாவது பிரகாரம், அம்மணி அம்மன் கோபுரம் அருகில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.