உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு சர்ச் திறப்பு விழா: 192 பேர் பங்கேற்பு

கச்சத்தீவு சர்ச் திறப்பு விழா: 192 பேர் பங்கேற்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திறப்பு விழாவில் இலங்கை மற்றும் தமிழக பக்தர்கள் 192 பேர் பங்கேற்றனர். பாக்ஜலசந்தியில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்., அல்லது மார்ச்சில் நடப்பது வழக்கம். இதில் தமிழக, இலங்கை மீனவர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு புதிய சர்ச் கட்டடம் அமைக்கப்பட்டதால் திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில் புதிய சர்ச் கட்டடம் திறப்புவிழா நேற்று நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பாதிரியார் உள்பட 82 மீனவர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் இந்திய--இலங்கை கடலோர காவல் படையினரின் சோதனைக்கு பின்னரே கச்சத் தீவில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த 110 பேர் பங்கேற்றனர்.சர்ச் புதிய கட்டடத்தை யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் திறந்து வைத்து திருப்பலி நடத்தினார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் தாஸ் ஜெபரத்தினம், வடக்கு மாகாண கவர்னர் ரேஸினோஸ், இலங்கையில் உள்ள இந்திய துாதரக துணை அதிகாரி நடராஜன், இலங்கை வடக்கு பிராந்திய கடற்படை தளபதி ரவீந்திர குணரத்னே, உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆயர் ஜஸ்டின் கூறியதாவது: வரும் மார்ச்சில் நடக்கும் கச்சத்தீவு சர்ச் விழாவில் தமிழக பக்தர்கள் இரு நாட்கள் தங்கி அருளாசி பெற இந்திய, இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும், என்றார். விழாவுக்கு பின் திரும்பிய தமிழக பக்தர்கள் மாலை 4:10 மணிக்கு ராமேஸ்வரம் வந்தனர். இவர்களிடம் மத்திய, மாநில உளவுதுறை, சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். விழாவில் பங்கேற்ற மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறுகையில்,“ கச்சதீவில் முள் மரங்கள் அகற்றி ஏராளமான பலன்தரும் மரங்களை வளர்த்து பசுமையாக பராமரிக்கின்றனர். தமிழக பக்தர்களுக்கு அனுமதி பெற்றுத் தந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !