உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசுரம் கூறும் பயனுள்ள கருத்துகள்

பாசுரம் கூறும் பயனுள்ள கருத்துகள்

புதுச்சேரி: பகவானை அடையவிடாமல் தடுக்கும் தடைகளான புலன் சார்ந்த உணர்வுகளை  நெறிப்படுத்தி, இந்திரியங்களை வெல்வது குறித்து ஆராய்ந்து அறிய வேண்டும்  என்று ஆண்டாள் நாச்சியார் பாசுரத்தில் உணர்த்தியுள்ளாள் என முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசினார். புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள  வரதராஜப் பெருமாள்  கோவிலில், வேதாந்த தேசிக சபை  சார்பில், மார்கழி  மஹோற்சவ திருப்பாவை உபன்யாசத்தில்,  முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: 8வது பாசுரம் கோதுகலமுடைய பாவையை எழுப்பும் பாசுரம்,  அதாவது, கிருஷ்ணனின் அன்புக்கு பாத்ரமான ஒரு கிருஷ்ண வல்லபையை எழுப்பும்  பாசுரம். கூடியிருந்து குளிர்தல் என்றபடி, சிறந்த அடியவர்கள் சூழ,  கூட்டாகச் சென்று பகவானை வழிபட வேண்டும் என்ற உயர்ந்த வைணவக் கோட்பாட்டைத்தான் கோதை நாச்சியாரின் இப்பாசுரமும் முன்னிறுத்துகிறது.

கீழ்வானம் வெள்ளென்று’ எனப் பாசுரம் தொடங்குகிறது.  விடியலின் அறிகுறியை  தோழியை எழுப்பும் ஆண்டாள் கோஷ்டியினர் வெளியில்  நின்று சொல்வதாகப் பொது அர்த்தம்.  ஸக்ருத்திவா ஹைவ அஸ்மை பவதி’ என்பது  உபநிஷத் வாக்யம், அதாவது, பரமபதம் பகல், சம்சாரம் இரவு, இதைத்தான் பகல்  கண்டேன் நாரணனைக் கண்டேன்’ என்று அனுபவித்தார் பூத்த தாழ்வார். இதைத்தான்  கோதாப் பிராட்டி இந்தப் பாசுரத்தின் உள்ளுரையாகச் சொல்கிறாள். கீழ்வானம் என்பது லீலாவீபூதி, மேல்வானம் என்பது நித்யவீபூதி,  எருமை சீறுவீடு என்று ரஜோ குணமும், தமோ குணமும் நிரம்பிய ஜீவாத்மாக்களை  சொல்கிறாள் ஆண்டாள். இத்தகைய ரஜோ, தாமச குணங்கள் உள்ளவர்கள் கீழ்வானம்  எனும் இந்தப் பிரகிருதியில் புனரபி ஜனனம் பனரபி மரணம் என்று பிறந்தும்  மடிந்தும் தான் இருப்பார்கள். சத்வ குணம் நிறைந்த ஜீவாத்மாக்கள் மேல்  வானமாகிய பரமபதத்தை அடைவார்கள் என்று கோதாப் பிராட்டி இங்கு உள்ளுறைப்  பொருளாகச் சொன்னாள்.

போவான் போக்கின்றாரைப் போகமால் காத்து’ என்ற சொற்கள் கர்மயோகம், ஞான யோகம், தந்த்ர யோகம் என்று பல வழிகளில் நம்பிப் போகின்றவர்களை போகமால் தடுத்து, பக்தி எனும் பிரபத்தியே பகவானை அடையும் எளிய வழி என்று காட்டி, அழைப்பதாக இந்த பதங்களின் உள்ளூரைப் பொருளாக கொள்ளலாம். முஷ்டிகள் என்ற மலர்களை மாய்த்ததையும் சொல்லி, அத்தகைய பராக்ரமமுடைய கிருஷ்ணனான தேவாதி ராஜனைத் தொழ தோழியரை எழுப்புவதாக பாசுரம் அமைந்துள்ளது. மாவாய்’ எப்பதை, தன் வாயில் வையகத்தை காட்டிய அந்த மாயனின் செயலையும் உணர்த்துவதாக அனுபவிக்கலாம். ஆவாவென்று ஆராய்ந்து’ என்பதை கர்ம, ஞான, பக்தி பாவங்களை விட தாஸ்ய பாவத்தையும், சரணாகதியை மட்டுமே கண்ணன் ஆராய்ந்தருள்வான் என்றும் பொருள் கொள்ளலாம். ஆராய்ந்து’ என்பதை நம் தகுதி நினைத்து, நம்மை ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்றும், பகவானின் பரத்துவத்தை நினைத்து அவனை ஆராய்ந்து உள்ளத்தில் கொள்ள வேண்டும் என்றும், பகவானை அடையவிடாமல் தடுக்கும் தடைகளான புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி, இந்திரியங்களை வெல்வது குறித்து ஆராய்ந்து அறிய வேண்டும் என்று ஆண்டாள் நாச்சியார் இந்த பாசுரத்தில் உணர்த்தியுள்ளாள் என்று உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !