உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க அங்கி நாளை வருகை: பக்தர்கள் மலையேற கட்டுப்பாடு

தங்க அங்கி நாளை வருகை: பக்தர்கள் மலையேற கட்டுப்பாடு

சபரிமலை: ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்கஅங்கி பவனி நாளை மதியம் பம்பை வந்தடைகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 26-ம் தேதி மதியம் 12:15 மணிக்கு சபரிமலையில் மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக கடந்த 22-ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி, நாளை மதியம் பம்பை வந்தடைகிறது. மதியம் 3:00 மணி வரை பம்பை கணபதி கோயில் முன்புறம் இந்த அங்கியை பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதன் பின்னர் பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு தலைசுமையாக சன்னிதானம் கொண்டு வரப்படும். இதையொட்டி நாளை மதியம் 12.30 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாது. தங்க அங்கி மரக்கூட்டம் கடந்த பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தங்க அங்கி 18-ம் படி வழியாக கோயில் முன்புறம் வந்த பின்னர்தான் மரக்கூட்டத்தில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பின் ஒரு பகுதியாக நேற்று முதல் ஹெலிகாப்டரில் கண்காணிப்பு தொடங்கியது. ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் தாழ்வாக பறந்து கண்காணிக்கின்றனர். இவர்களிடம் நவீன கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளது. சந்தேகம் ஏற்பட்டால் உட்காட்டுக்குள் இறங்கவும், துப்பாக்கிசூடு நடத்தவும் கமாண்டோக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !