எட்டிமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
ஆர்.கே.பேட்டை: பந்திகுப்பம் எட்டிமாரியம்மன் கோவிலில் நேற்று, வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்துள்ளது, பந்திகுப்பம். இந்த கிராமத்தின் தெற்கே, எட்டி மரத்தோப்பில் அமைந்துள்ளது, சப்த கன்னியர் மற்றும் எட்டி மாரியம்மன் கோவில், வானுயர வளர்ந்துள்ள எட்டி மரங்களின் நடுவே, அமைதியான சூழலில் அருள்பாலிக்கிறார் அம்மன். கசப்புக்கு பெயர் பெற்றது எட்டி காய். பக்தர்களின் கசப்பான அனுபவங்களை களைந்து, சுக வாழ்வு தருவார் அம்மன் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடக்கிறது. பந்திகுப்பம், நடு பந்திகுப்பம், மேல் பந்திகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த கிராமங்களை பூர்வீகமாக கொண்டு, தற்போது கர்நாடக மாநலம், பெங்களூரில் வசிப்பவர்களும், வந்து செல்கின்றனர். பங்குனி மாதத்தில், பொங்கல் வைத்து அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது. மூலவர் அம்மன் எதிரே உள்ள நாகாலம்மன், விநாயகர் மற்றும் எட்டி மரத்தடியில் அமைந்துள்ள சப்த கன்னியருக்கும் நேற்று, வெள்ளிக்கிழமையை ஒட்டி காலை, 10:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. திரளான பகுதிகள், அம்மனை தரிசனம் செய்தனர்.