மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவம் விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடைரோடு சிவன்புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கடந்த மாதம், 16ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஐயப்பனுக்கு சிறப்பு புஷ்பாபிேஷக பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. 10ம் தேதி, 108 கூடைகளில் மலர்களை கொண்டு ஐயப்ப சுவாமிக்கு மகா புஷ்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடும், கொடியேற்றமும், ஐயப்ப சேவா சமிதியின், 57 ம் ஆண்டு விழாவும், உற்சவ பலி சிறப்பு பூஜையும், பள்ளிவேட்டையும் நடந்தது. 22 ம் தேதி காலை ஆறாட்டும், கொடிக்கல்பறையும் நடந்தது. அதன் பின்னர் ஐயப்ப சுவாமிக்கு, 25 கலசங்களால் கலசாபிேஷகம், களபாபிேஷகம் மற்றும் சிறப்பு பஞ்ச வாத்யம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலையில் பவானி ஆற்றின் கரை அருகேவுள்ள மைதானம் மாரியம்மன் கோவிலிருந்து அலங்காரிக்கப்பட்ட தாமரை ரதத்தில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் துவங்கியது. எம்.எல்.ஏ., சின்னராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறுவர், சிறுமிகள், பெண்கள் கையில் தீபம் ஏந்தியபடி, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பஜனைக் குழுவினர் பாடல் பாடிச் சென்றனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் வான வேடிக்கை நடந்தது. பின்பு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 26ம் தேதி மண்டல பூஜை, 41 ம் நாள் விழாவும், பட்டி மன்றமும், 31ம் தேதி பஜனையும், 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும், 14 ம் தேதி மகரஜோதி திருநாள் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதி தலைவர் அச்சுதன் குட்டி மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.