திருவண்ணாமலை மஹா தீப கொப்பரைக்கு பூஜை: பக்தர்கள் தரிசனம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, மலை உச்சியிலிருந்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த, 12 அன்று, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து, 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்து வழிபட்டனர். மஹா தீபம் ஏற்ற, 3,500 டன் நெய், 1,000 மீட்டர் காடா துணி ஆகியவை பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த மஹா தீபம், நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மஹா தீப கொப்பரை, நேற்று காலை மலை உச்சியிலிருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மஹா தீபம் ஏற்றப்பட்ட தீப மை பிரசாதம், வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு முதலில் தீப மை சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். நெய் காணிக்கை செலுத்திய அனைவருக்கும், தீப மை பிரசாதம் இலவசமாக கோவில் நிர்வாகம் வழங்கும். நெய் காணிக்கை செலுத்தாதோர், பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, தீப பை பிரசாதத்தை பக்தர்கள் பெற்று கொள்ளலாம்.