மூணாறில் கன்னியம்மன் கோயில் திருவிழா
மூணாறு: தோட்டத் தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழா கொண்டாடினர். கிறிஸ்துமஸ் பண்டிகையில்போது, கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் மூணாறு பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் தினத்தன்று கோயில்களில் திருவிழாக்களை நடந்தும் வினோத வழக்கம் உள்ளது. இதனை கடந்த ஒரு நுõற்றாண்டாக கடை பிடித்து வருகின்றனர். மூணாறு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வாகித்து வந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்தனர். அப்போது தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் கோயில்களை அமைத்து வழிபட்டனர். இந்த வழக்கம் கடந்த ஒரு நுõற்றாண்டாக கடை பிடிக்கப்பட்டு வருகின்றது. கிறிஸ்துஸ் பண்டிகை நெருங்குவதற்கு முன்பு வீடுகளை சுத்தம் செய்து, குறைந்த பட்சம் ஒரு மாதம் விரதம் இருந்து,கிறிஸ்துமஸ் தினத்தன்று நடத்தப்படும் கோயில்களில் திருவிழாவில் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இடம் பெறும்.இதற்காக தமிழகத்தில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்படுவர். உலக முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மூணாறைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் கோயில்களில் வழக்கம்போல் திருவிழாக்களை உற்சாகத்துடன் நடத்தினர். மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட்,டாப் டிவிஷனில் உள்ள கன்னியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது, பால்குடம், பறவை காவடி,முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.