மதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
மதுரை: மதுரை டோக்நகர் சின்மயா மிஷன் தட்சிணாமூர்த்தி சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. சுவாமி சிவயோகானந்த மகராஜ் தலைமையில் துளசிதாசர் இயற்றிய அனுமன் துதிப்பாடல் பாராயணம் செய்யப்பட்டது. அனுமனுக்கு வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் தீபாராதனைகள் முடிந்து சிறப்பு அலங்காரமானது. கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கு பூஜைகள் முடிந்து வடைமாலை சாத்துப் படியானது.
திருநகர் மகாலட்சுமி காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து வடை மாலை சாத்துப்படியானது.
தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகம் யோகவிநாயகர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுரேஷ் பட்டர் தலைமையில் ஹோமம் நடந்தது.
சோழவந்தான் ஜெயவீரஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் பூஜாரி சிதம்பரம் அபிஷேக, தீபாராதனைகள் மற்றும் வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை செய்தார்.