காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜன., 8ல் சொர்க்கவாசல் திறப்பு
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் விழா நேற்று துவங்கியது. வரும் 8ல் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஜன., 8ல் நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை கோவிலில் பகல் பத்து உற்சவமான திருமொழித் திருநாள் விழா துவங்கியது. அரங்கநாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்ளே வலம் வந்து ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். முதலில் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுாஜர் ஆகிய ஆழ்வார்களுக்கு மரியாதை செலுத்தி சடாரி சாற்றப்பட்டது. இதன் பின், அரங்கநாதப் பெருமாள் முன்பு கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்தனர். வரும் 7ல் இரவு பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருள்வார். பின்பு, 8ல் காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.