கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் கொடி மரம் தயாரிக்கும் பணி துவக்கம்
பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 49 அடி உயரத்தில் கொடி மரம் தயாரிக்கும் பணி துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 85 ஆண்டுகளுக்கு பின், பிப்., 2ல் நடக்க உள்ளது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள, பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனால், கங்கை நதி வரை போராடி, வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது.இக்கோவிலில், 1932ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், தற்போது, 85 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்., 2ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இக்கோவிலுக்கு, பல ஆண்டு களாக கொடி மரம் இல்லாமல் இருந்து வந்தது. காஞ்சி சங்கரமட கமிட்டியினர், கொடி மரம் அமைக்க முடிவு செய்தனர்.
இதன்படி, கொடி மரம் அமைக்க, இந்தோனேசியாவில் இருந்து, 52 அடி நீளத்தில், 7 டன் எடையுள்ள வேங்கை மரம், துாத்துக்குடி துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து, பெரிய ட்ரெய்லர் லாரியில் கங்கைகொண்டசோழபுரத்திற்கு கடந்த வாரம் எடுத்து வரப்பட்டது. கொடி மரம் அமைக்கப்படும் கல் மண்டபம், கோவிலின் முன்புறத்தில் உள்ளது. இந்த இடத்தில் அமைக்கப்படும் அளவுகளில் மரம் செதுக்கப்பட்டு வருகிறது. கொடி மரத்தின் வேலைப்பாடுகள் முடியும் தருணத்தில், 43.8 அடி மேல்பகுதியும், 6.9 அடி பீடத்திலும் அமைக்கப்பட உள்ளது. மரம் வேலைப்பாடுகள் முடிந்தவுடன் எண்ணெயில் ஊற வைத்து, அதன் பின், தங்க முலாம் பூசப்பட்ட செப்புத்தகடு அமைக்கப்படும்.
கங்கையிலிருந்துபுனித நீர்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 85 ஆண்டுகளுக்கு பின், பிப்., 2ல் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, டிச., 5ல் பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை செய்யப்படும் இடத்தில், கோவிலுக்கு வெளிப்பிரகாரத்தில் தற்போது பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான புனித கங்கை நீர் எடுத்து வருவதற்காக, உத்தரகண்ட் மாநிலம் தேவபிரயாகை அல்லது ரிஷி கேஷத்திற்கு, 20 பேர் அடங்கிய குழுவினர், வரும், 6ல் ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளனர். ரிஷி கேஷத்தில் சங்கர மடம் மற்றும் தமிழ் நலச் சங்கத்தினர், இக்குழுவை வரவேற்று, கங்கை நீரை அளிக்க உள்ளனர். தலா, 10 லிட்டர் கொள்ளளவு உள்ள, 108 குடங்களில் புனித நீர் எடுத்து வரப்படவுள்ளது.