பலனை எதிர்பாராமல் வருவதே பக்தி ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள்
சென்னை: பக்தி என்பது எல்லை, அதிசயங்களை கடந்தது; அது பலனை எதிர்பாராமல் வருவது, என, ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் அனுக்கிரஹபாஷனம் செய்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பிரிவும், ஸ்ரீபகவத் ராமானுஜாச்சாரிய தர்ஷன கைங்கர்ய டிரஸ்டும் இணைந்து, ராமானுஜரின் உலகம்: இன்றைய பாரம்பரிய வரலாற்று நினைவுகள் எனும் தலைப்பிலான, நான்கு நாள், சர்வதேச கருத்தரங்கம், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று துவங்கியது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமட் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் கருத்தரங்கை துவக்கி வைத்து, அனுக்கிரஹபாஷனம் செய்ததாவது: ராமானுஜர் வேதம், அவேதம், இரண்டையும் சமமாக பாவித்தவர். பக்திக்கு எல்லை இல்லை; அது, அதிசயங்களை கடந்தது. ராமானுஜர் நோக்கத்தை, நாம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, ஆண்டவன் சுவாமிகள் அனுக்கிரஹபாஷனம் செய்தார். தலைமைத் தேர்தல் முன்னாள் கமிஷனர், கோபாலசுவாமி விழாவிற்கு தலைமை தாங்கிப் பேசியதாவது: ராமானுஜர் குறித்து, டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும், நான்காவது நிகழ்ச்சி இது. இந்த சம்பிரதாயங்களை, இன்றைய இளைஞர்கள் ஊன்றி கற்கவே, இது போன்ற கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அடுத்த மூன்று நாட்கள், ராமானுஜர் பற்றிய பல்வேறு விஷயங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, யு.எஸ்.ஏ., புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் வசுதா நாராயணன் கருத்துரையாற்றினார். யு.எஸ்.ஏ., ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர் பிரான்சிஸ் எக்ஸ் கோலினே, பேராசிரியர் வெங்கடாசலபதி ஆகியோர் வழத்திப் பேசினர். விழாவில், பல்கலைக் கழக பதிவாளர் டேவிட் ஜவஹர், பேராசிரியர் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.