பழநி யாத்திரை பக்தர் நடைபாதை ஆக்கிரமிப்புகள் சீரமைக்கப்படுமா?
ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரூ.12 கோடி செலவில் போடப்பட்ட நடைபாதை சீரமைப்பு இல்லாமல் உள்ளது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். பழநியில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்கு மாநிலத்தின் பல மாவடங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். பல மாவடங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி ரோட்டில் தான் செல்ல வேண்டும். தைப்பூசம் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு புறப்பட்டு விடுவர். இவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக ரூ.12 கோடி செலவில் ரோட்டின் தெற்கு ஓரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் -பழநி இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த நடை பாதையின் பல இடங்கள் சேதமடைந்தும், செடி கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. பல இடங்களில் நடைபாதையில் கடைகள் வைத்துள்ளனர். இதனால் ஒருசில இடங்களில் நடைபாதை இருக்கும் இடம் சரிவர தெரிவதில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்த செல்ல வேண்டியுள்ளது. ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டி பிரிவிலிருந்து பல இடங்களில் செடிகொடிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தைப்பூசத்திருவிழா நடப்பதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அதற்குள் பாதயாத்திரை பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். இவர்களின் வசதிக்காக போடப்பட்ட நடைபாதையில் சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.