உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலேசிய கோயில் அன்னதானத்தில் உயிர்வாழ்ந்த திண்டுக்கல் இளைஞர்

மலேசிய கோயில் அன்னதானத்தில் உயிர்வாழ்ந்த திண்டுக்கல் இளைஞர்

திண்டுக்கல்: வெளிநாட்டு வேலை ஆசையில் மலேசியாவிற்கு சென்று, அங்கு கோயில் அன்னதானத்தை உண்டு உயிர்வாழ்ந்த திண்டுக்கல் இளைஞர், மதுரை பேராசிரியை மீது புகார் செய்துள்ளார். திண்டுக்கல் ரயில்வே போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்.

மத்திய ரயில்வே போலீசில் உள்ளார். இவரது மகன் சரவணக்குமார், 23. பி.இ., முடித்துள்ளார். மதுரை பேராசிரியை: இவரது நண்பர்கள் மூலம் திருநெல்வேலி தனியார் பொறியியல் கல்லுாரியில் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் அறிமுகமானார். பிரியங்கா, சரவணக்குமாரிடம் தொடர்பு கொண்டு தானும், தனது நண்பர் ஜானகி ராமனும் மலேசியாவில் பெரிய கம்பெனி நடத்துவதாகவும், அங்கு சென்றால் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். இதை நம்பிய சரவணக்குமார் அவர்களிடம் ரூ.3 லட்சம் கொடுத்தார். பின்பு டூரிஸ்ட் விசாவில் மலேசியா அழைத்து சென்றனர். அங்கு சாதாரண தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்த்தனர். அந்த நிறுவனம் சம்பளம் தரவில்லை. அன்னதானம் காப்பாற்றியது: இதனால் சாப்பிட்டிற்கு வழியில்லாமல் தவித்த சரவணகுமார், அங்குள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோயில்களில் வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டார். இவ்வாறு 5 மாதம் தவித்த இளைஞரிடம், கம்பெனி நிர்வாகம் ரூ.60 ஆயிரம் தந்தால்தான் இந்தியா செல்ல முடியும் என, நிர்ப்பந்தம் செய்துள்ளது. இதனால் சரவணகுமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். வேறு வழியின்றி அத்தொகையை செலுத்திவிட்டு இந்தியா வந்துள்ளார். இங்கு வந்தவர், திண்டுக்கல் எஸ்.பி., சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது: பிரியங்காவும், ஜானகிராமனும் மலேசியாவில் தங்கியுள்ளனர். அவர்களிடம் பணத்தை கேட்டால் மிரட்டுகின்றனர். அவர்கள் அளித்த விசா போலியானது. இதனால் என்னை விமானத்தில் ஏற்றாமல் இறக்கி விட்டனர். நான் பல நாட்கள் சாப்பிடாமல் அழுது, தவித்தேன். எனது பெற்றோர் முயற்சியால் திரும்பி வந்தேன். வெளிநாட்டு வேலை ஆசையே போய்விட்டது. எனது தந்தை போலீசாக இருந்தும் ஏமாற்றுவோரை தடுக்க முடியவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !