திருக்கோஷ்டியூர் வைகுண்ட ஏகாதசி விழா: ஜன.8ல் பரமபத வாசல் திறப்பு
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.8 இரவில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். கடந்த டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. அதிகாலை திருப்பள்ளியெழுச்சி முடிந்தவுடன் பெருமாள் புறப்பாடாகி ஆண்டாள் சன்னிதியில் எழுந்தருளினார். ஜன.,7ல் மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னமர வீதி புறப்பாடு நடைபெறும். அன்று பகல் பத்து நிறைவடைகிறது.
ஜன.,8ல் வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு காலை 9 மணிக்குபெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிசயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்துதாயார் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பின்னர் இரவு 8:00 மணிக்கு ராஜஅலங்காரத்தில் காட்சி அளிப்பார். இரவு 10:30 மணி அளவில் பரமபத வாசல் திறந்த பின்னர், அதைக் கடந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து,ஏகாதசி மண்டபம் சென்று பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் மங்களாசாசனம் முடிந்து தென்னமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து இரவுப்பத்துஉற்சவம் துவங்கும். இரவுப் பத்தில் தினசரி மாலை 6:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசிப்பார். தொடர்ந்து தென்ன மரவீதி புறப்பாடாகி தாயார் சன்னிதியில் எழுந்தருளல் நடைபெறும்.