ஆண்டவனை அடையும் வழி எது?சொற்பொழிவில் கருத்து
திருப்பூர்:""அகங்காரத்தை இழந்தால்தான், ஆண்டவனை அடைய முடியும், என, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார். அவிநாசி, ஸ்ரீ செந்தூர் மஹாலில், திருத்தொண்டர் புராணம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், தினமும் ஒரு தலைப்பில், சிவனடியார்கள் குறித்து பேசி வருகிறார். மூன்றாம் நாளன்று, விசாலினி பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. கூனம்பட்டி ஆதீனம், நடராஜ சிவம் தலைமை வகித்தார். ஆன்மிக நண்பர்கள் குழு தலைவர் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசியதாவது:
இறைவனின் புகழ்பாடும் நூல்கள் நிறைய இருந்தாலும், அதில் மிக முதன்மையானது பெரிய புராணம். இறைவனின் பக்தியை சொல்லும் நிஜமான அடையாளங்களாக, அடியார்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவனை பின்பற்றி வாழ்ந்த அவர்கள், என்ன மாதிரியாக வாழ்ந்தார்கள், எதை பின்பற்றி வாழ்ந்தார்கள், சிறந்த பக்தி நிலைக்கு அவர்கள் உயர என்ன காரணம் என்பதை, திருத்தொண்டர் புராணம் வாயிலாக, நாம் அறிந்துகொள்ளலாம். அவர்களது வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம், நாமும் புண்ணியம் பெறுகிறோம். நல்ல புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது; அதை பின்பற்றியும் வாழ வேண்டும். நல்ல விஷயங்களை படித்து அறிந்தும், அதை பின்பற்றி வாழாதவர்களை, முட்டாள்கள் என்கிறார் திருவள்ளுவர்.அகங்காரம் இல்லாமல், மனிதர்கள் இல்லை; அகங்காரத்தை கரைப்பதுதான் பக்தி. பக்தி என்றால், எதையோ அடைவது என்று அனைவரும் நினைக்கின்றனர். பக்தி என்பது, அகங்காரத்தை இழப்பது. அகங்காரத்தை இழந்தால்தான், கடவுளை அடைய முடியும். அதை, அடியார்களின் வாழ்க்கை வாயிலாக, திருத்தொண்டர் புராணம் நமக்கு தெளிவுபடுத்துகிறது, என்றார். அதன்பின், "இளையான்குடி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற தலைப்பில், ராமகிருஷ்ணன் பேசினார்.