புராதன சிவாலயங்கள் புனரமைக்கப்படுமா?
ஆர்.கே.பேட்டை : ஈசனை பெயரில் கொண்ட கிராமத்தில், புராதன சிவாலயங்கள் புனரமைக்கப்படாமல் சிதைந்து வருவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிராமத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பள்ளிப்பட்டு அடுத்துள்ள கிராமம் ஈச்சம்பாடி. கிராமம் சிறியது என்றாலும், இங்குள்ள கோவில்களில் கட்டமைப்பு அபாரமானது. 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டட அமைப்பை கொண்டுள்ளன. கிராமத்தின் வடக்கில் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலும், கிழக்கில் காமாட்சியம்மன் உடனுறை மாதேஸ்வரன் கோவில் என, இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில், சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழுந்து, ஒளியூட்டுகின்றன. மூலவருக்கு எதிரே உள்ள நந்தியம் பெருமான், தலையை வடக்கு நோக்கி சாய்த்தவாறு வித்தியாசமான கோலத்தில் அமைந்துள்ளார். நுழைவாயில் அருகே, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படாமல் உள்ளது. அம்மனுக்கு தனி சன்னிதி இல்லை. கருவறையில் மூலவருக்கு அருகிலேயே அருள்பாலிக்கிறார். கோவிலின் கட்டுமானம் பராமரிப்பு இன்றி சிதைந்து வருகிறது. மேல்தளத்தில் செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன.
பிரமிக்க வைக்கும் கட்டமைப்புடன் கிராமத்தின் வடக்கில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில், பிரம்மாண்ட நுழைவாயில் கொண்டுள்ளது. நுழைவாயிலும், கோவில் கட்டுமானமும் சிதைந்து வருகின்றன. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கோவில் வளாகத்தில் புதர் மண்டி கிடக்கிறது. மேல்தளத்தில் வளர்ந்திருந்த மரங்கள், கடந்த ஆண்டு பகுதிவாசிகளால் வெட்டி அகற்றப்பட்டன. கோவிலில் நித்திய பூஜைகள் நடந்து வருகின்றன. அம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. அமைதியான சூழலில் உள்ள இந்த கிராமத்திற்கு சிறப்பான வரலாறு உள்ளது என்பது, இந்த கோவில்களின் அமைப்பை பார்த்தாலே விளக்குகிறது. கைலாசநாதர் கோவிலுக்கு, கி.பி., 924ல் பராந்தக சோழன் மற்றும் ராஜேந்திர சோழ மன்னர்களால், மானியம் வழங்கப்பட்டு வந்ததாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. லோகநாதன். கல்வெட்டு ஆய்வாளர்.