சபரிமலையில் ஜன.,18 வரை நெய்யபிஷேகம்: 20ல் நடை அடைப்பு!
சபரிமலை: மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் ஜன.,18-வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்றும், 20-ம் தேதி நடை அடைக்கப்படும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடக்கிறது. அதன் பின்னர் 18-ம் தேதி காலை 10 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று 11.30-க்கு தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும். 19-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை போன்றவை நடைபெற்றாலும், நெய்யபிஷேகம், களபாபிஷேகம் கிடையாது. அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கும் வரை பக்தர்களுக்கு தரிசனம் உண்டு. இரவு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும். அதன் பின்னர் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அனுமதி கிடையாது. 21-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து அபிஷேகம், கணபதி ஹோமம் நடத்திய பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநதி முன்னிலையில் நடைஅடைக்கப்படும்.