உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு வைகுண்ட நாதர் திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம். மதியம் 2.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனம். மாலை 6 மணிக்கு பெருமாள் ஆடி வீதி சுற்றி வந்து இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்தார். இந்த சொர்க்க வாசல் வெளியே வந்த பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் அனிதா, தக்கார் செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசலில் பெருமாள் எழுந்தருளினார். மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு அங்கிருந்து புறப்பட்டு கோயிலை சென்றடைந்தார்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் காலை 6:25 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகையை முன்னிட்டு அழகர் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு மஹா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சுவாமி, அம்மனுக்கு தங்க அங்கி, வைரவேல், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. பகலில் சஷ்டி மண்டபத்தில் முருகனுக்கு பால் உட்பட 18 வகையான அபிஷேகம், தீபாராதனை முடிந்து சுவாமி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி தலைமையில் பேஸ்கர் தேவராஜ் செய்திருந்தார்.

குருவித்துறை: குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் சுவாமி கோயிலில் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பில் பக்தர்கள் தரிசனம் பெற்றனர். இக்கோயிலில் வைகுண்டபதி புஷ்பஅலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவியருடன் பெருமாள் சொர்க்கவசலில் எழுந்தருளினார். பக்தர்கள் திருநாமம் கோஷமிட்டு பரமபத வாசல்வழியாக வந்து தரிசித்தனர். ஆயிரங்கால்மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் சுவாமிகள் மங்களாசாஸன சேவை நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு நடந்தது. நு?ற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், ரங்கநாதர்பட்டர் ஆலய ஊழியர்கள் செய்திருந்தனர்.

சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்கவாசலில் ஸ்ரீ தேவி, பூதேவியருடன் பெருமாள் புஷ்பசப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமானுஜர், திருமங்கையாழ்வார், வேதாந்ததேசிகர் ’திருவாசக பாசுரம்’ பாட எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. ரகுநாதர்பட்டர் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாக அதிகாரி லதா கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

சிந்துபட்டி: சிந்துபட்டி பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு, கம்ப திருமஞ்சணம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள சிந்துபட்டியில் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தென் திருப்பதி என பெயர் பெற்றுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. காலை 10:00 மணிக்கு கொடிமரத்திற்கு கம்பதிருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. கருடவாகனத்தில் பெருமாள், நம்மாழ்வாருடன் இரவு நகர்வலம் வந்து அருள்பாலித்தனர்.

திருப்பரங்குன்றம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் பவளக் கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள பெரிய கதவு திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார். .

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அதிகாலை மூலவர்கள் தேவி, பூமா தேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் முடிந்து, காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் உற்சவர் பெருமாள் அருள்பாலித்தார். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி பிரஸன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சயன கோல அலங்காரமானது. இரவு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாடு நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவருக்கு சயன கோல அலங்காரமும், மூலவர்கள் லட்சுமி நாராயணருக்கு புஷ்பாங்கி அலங்காரமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !