உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தா... கோஷங்கள் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு

கோவிந்தா... கோஷங்கள் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி:  திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களின், ’கோவிந்தா... கோவிந்தா...’ என்ற கோஷங்களுக்கு இடையே, நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்தார். திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் போற்றப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிச., 28ல் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவ நாளான நேற்று, அதிகாலை, 3:45 மணிக்கு, ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை மற்றும் கிளி மாலை அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள், நாழிக்கேட்டான் வாசல் வழியாக சொர்க்க வாசலை சென்றடைந்தார்.காலை, 5:00 மணிக்கு, பக்தர்கள், ’கோவிந்தா... கோவிந்தா...’ என்ற கோஷங்கள் முழங்க, சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை நம்பெருமாள் கடந்து சென்றார்.

தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் எதிரே திருக் கொட்டகையிலும், ஆயிரங்கால் மண்டபத்தினுள் உள்ள திருமாமணி மண்டபத்திலும் எழுந்தருளினார்.தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர், சொர்க்க வாசலை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை: திருமலை ஏழுமலையான் கோவிலில் நேற்று, முன்தினம் இரவு 1:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நேற்று மட்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஏழுமலையான தரிசனம் செய்ய, சொர்க்க வாசல் வழியாகச் சென்றனர்.அதனால், தேவஸ்தானம் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தர்ம தரிசனத்தை துவக்கியது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வி.ஐ.பி., பிரேக், ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும், இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !